ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தியதில் குளறுபடி..! 500 ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை நோட்டீஸ்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ப்ளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியின்போது கவனக்குறைவுடன் ஈடுப்பட்டதாக சுமார் 500 -க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ப்ளஸ் 2 விடைத்தாள்களைத் திருத்தும் பணியில் சுமார் 25,000 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இதனை அடுத்து ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. தேர்வு முடிவுகளைப் பார்த்த மாணவர்களில் சுமார் 50,000 -க்கும் மேல் விடைத்தாளின் பிரதிகளைக் கேட்டு விண்ணப்பித்தனர். இதில் 4500 மாணவர்கள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தனர்.
இதனை அடுத்து நடந்த மறுகூட்டலில் ஆசிரியர்களின் கவனக்குறைவால் அதிகமான மாணவர்களுக்கு குறைந்த மதிப்பெண் வழங்கியிருப்பது தெரியவந்தது. இதில் 72 மதிப்பெண் பெற்றிருந்த மாணவருக்கு 27 மதிப்பெண் என கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு தவறுகள் நடந்திருப்பது மறுக்கூட்டலின் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக கணிதம், உயிரியல் போன்ற பாடங்களில் அதிக தவறுகள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து விடைத்தாளைத் திருத்தும் பணியில் கவனக்குறைவாக ஈடுப்பட்ட சுமார் 500 -க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் விடைத்தாள் திருத்தும் பணியில் ஏற்படும் தவறுகள் முன்பை விட தற்போது குறைந்துள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.