'தொடர் மழை, செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால்'... '21 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தொடர் மழை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் 21 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வலுப்பெற்று நாளை அதிகாலை அதிதீவிர புயலாக புதுச்சேரி அருகே கரையைக் கடக்க உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் செவ்வாய் காலை தொடங்கி தொடர் மழை பெய்து வருகிறது. நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக காஞ்சிபுரம் அருகே குன்றத்தூர் பகுதியில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. வெள்ள நீரின் வரத்திற்கேற்ப உபரிநீரானது படிப்படியாக வெளியேற்றப்படுவதால் அடையாறு ஆற்றின் வலது, இடது கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு முதற்கட்ட வெல்ல அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், முடிச்சூர், பெருங்களத்தூர், மேற்கு தாம்பரம், திருநீர்மலை, பொழிச்சலூர், அனகாபுத்தூர், பம்மல், சென்னை விமான நிலையம், கவுல்பஜார் மற்றும் அடையாறு ஆற்றின் வலது கரையோர பகுதிகள் உள்ளிட்ட இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் எருமையூர், கரசங்கால், ஆதனூர், திருமுடிவாக்கம், மணிமங்கலம், வரதராஜபுரம், கோளப்பாக்கம், நரப்பாக்கம் மற்றும் அடையாறு ஆற்றின் இடது கரையை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகள் ஆகிய இடங்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்