‘இலவச சைக்கிள் வழங்கும் திட்டம்’... ‘துவக்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி’... ‘யாருக்கெல்லாம் கிடைக்கும்?’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பள்ளிகளுக்கு நீண்ட தூரம் சென்று கல்வி கற்கும் மாணவ-மாணவிகளின் சிரமத்தை போக்கும் விதமாக ஆண்டு தோறும் தமிழக அரசின் சார்பில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன.
அதன்படி இந்த ஆண்டும் இலவச மிதிவண்டிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. 2020 -21 கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 5 லட்சத்து 45 ஆயிரத்து 166 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது. இவர்களில் மாணவர்கள் 2 லட்சத்து 38 ஆயிரத்து 456 பேர், மாணவிகள் 3 லட்சத்து 6 ஆயிரத்து 710 பேர் ஆவர். இதற்காக 214 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஒன்பது மாணவர்களுக்கு மட்டும் இந்நிகழ்ச்சியில் முதல்வர் சைக்கிள்களை வழங்கியுள்ள நிலையில் இனி வரும் நாள்களில் பிற மாணவர்களுக்கு அவர்களது பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயரதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மற்ற செய்திகள்