‘1000 குடும்பம் இத நம்பித்தான் இருக்கு’.. பியூட்டி பார்லரை திறக்க அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உரிய கட்டுப்பாடுகளுடன் பெண்கள் அழகு நிலையங்கள் திறக்க அனுமதி வேண்டும் என ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 50 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் ஊரடங்கில் தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஒருசில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெண்கள் அழகு நிலையங்களை உரிய கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி வேண்டும் என தமிழக பெண் அழகு கலை நிபுணர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
மதுரை மாவட்டம் முழுவதும் சுமார் 1500 அழகு நிலையங்கள் உள்ளன. இவற்றை நம்பி சுமார் 1000 குடும்பங்கள் உள்ள நிலையில், ஊரடங்கு காரணமாக 50 நாட்களுக்கும் மேலாக அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டியும், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவித்த கடனுதவி அழகு நிலையங்களுக்கும் வழங்க வேண்டியும் அமைச்சர் ஆர்.பி உதயக்குமாரை சந்தித்து தமிழக பெண் அழகு கலை நிபுணர் சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டது. மேலும் உரிய கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது.