‘திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு’!.. உதயநிதி ஸ்டாலின் களமிறங்கும் தொகுதி எது தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடித்ததால், திட்டமிட்டபடி வேட்பாளர் பட்டியல் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதிகள் நேற்றிரவு இறுதி செய்யப்பட்டதால், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்திலிருந்து மு.க.ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், ‘திமுக அமைத்துள்ளது அரசியல் கூட்டணி கிடையாது. கொள்கை கூட்டணி. 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 61 தொகுதிகளில் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கி உள்ளோம்.
திமுக 173 தொகுதிகள், காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகள், மார்க்சிஸ்ட் 6, மதிமுக 6, இந்திய கம்யூனிஸ்டு கட்சி 6 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 3 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி 1 தொகுதி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி 1 தொகுதி, ஆதித்தமிழர் பேரவை 1 தொகுதி, மக்கள் விடுதலை கட்சி 1 தொகுதி என்று எங்களுக்குள் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் கொங்குநாடு மக்கள் கட்சி, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி ஆகியவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள். அதனால் உதயசூரியன் சின்னம் 187 தொகுதிகளில் களம் காண்கிறது’ என ஸ்டாலின் தெரிவித்தார்.
இதில் எடப்பாடியில், முதல்வர் பழனிச்சாமியை எதிர்த்து திமுக வேட்பாளர் சம்பத்குமார், கரூரில் விஜயபாஸ்கரை எதிர்த்து செந்தில் பாலாஜி, போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து தங்கத் தமிழ்ச்செல்வன் போட்டிடுகின்றனர்.
அதேபோல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டிருக்கிறார். கொளத்தூரில் மீண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
மற்ற செய்திகள்