‘ஒரு கையால் பேஸ்புக் நேரலை’.. ‘இன்னொரு கையால் டாஸ்மாக்குக்கு பூட்டு!’.. தனி ஆளாக சென்று கெத்து காட்டிய பெண்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேசிய பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் என்று சொல்லப்படும் கலைச்செல்வி என்பவர் நீண்டநேரம் செயல்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு சென்று பூட்டு போட்டு அதனை நேரலையாக முகநூலில் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கலைச்செல்வியின் இந்த செயலால் அதிர்ந்து போன கடைகளின் உரிமையாளர்கள் 5 பேர் தத்தம் கடைகளை மூடினர். ஆனாலும் பட்டாபிராம் காவல் நிலையம் எதிரே இருந்த மதுபான கூடம் மட்டும் மூடப்படாமல் இருந்தது தெரியவந்தது. இதனால் அங்கு சென்ற கலைச்செல்வி அந்த மதுபான கூடத்தின் வெளிக் கதவை மூடி பூட்டு போட்டு விட்டார். பின்னர் அந்த சாவியை பட்டாபிராம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து மது விற்பனை செய்வோர் மீது புகார் அளித்தார்.
மது விற்பனை செய்வதற்கு டாஸ்மாக்கில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அரசு நேரம் நிர்ணயித்துள்ள நிலையில், பல இடங்களில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் இளைஞர்களும் பெரியோர்களும் அதற்கு அடிமையாகி தத்தம் வாழ்க்கையை அழித்துக் கொள்வதாகவும், விடுமுறை தினங்களில் கூட 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாகவும் கலைச்செல்வி குறிப்பிட்டுள்ளார்.
எனவே விதிமுறைகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.