'3 வருஷம் கடின உழைப்பு'... ஒன்பதாம் வகுப்பில் உலக சாதனை!.. பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு மழை!.. அப்படி என்ன சாதித்தார் திருவண்ணாமலை வினிஷா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவண்ணாமலையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், ஸ்வீடன் நாட்டின் மாணவர் பருவநிலை விருது மற்றும் இந்தியாவின் பாரத பிரதமரின் விருது என இரண்டு விருதுகளை பெற்றுள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி வினிஷா உமாசங்கர். இவர் சூரிய ஒளியினால் இயங்கும் சலவைப் பெட்டி வண்டி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்தக் கண்டுபிடிப்பு ஸ்வீடன் நாட்டின் 'சுத்தமான காற்று' விருது பிரிவில் இந்த ஆண்டிற்கான மாணவர் பருவநிலை விருதினை வென்றுள்ளது.
இதுகுறித்து மாணவி வினிஷா கூறுகையில், "புதுப்பிக்கத்தக்க ஆற்றலான சூரிய ஒளியை பயன்படுத்துவது இந்த கண்டுபிடிப்பின் முக்கிய நோக்கம். இதனால், ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படுகிறது.
எரிக்கப்பட்ட கரியை சுற்றுப்புறங்களில் கொட்டுவதால் நிலம், நீர், காற்று மாசுபடுவது தவிர்க்கப்படும். கரிக்காக மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். ஒரு மரம் தினமும் ஐந்து பேர்களுக்கு ஆக்சிஜன் தருகிறது.
மரங்கள் வெட்டப்படுவதால் காற்றில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. இதை கருத்தில் கொண்டு சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை கொண்டு சலவை பெட்டி இயங்குவதை கண்டறிந்தேன்.
சுமார் 30 - 40 ஆயிரம் ரூபாய் செலவில் இந்த இஸ்திரி வண்டியை உருவாக்கிக் கொள்ளலாம். கடந்த மூன்று வருடங்களாக முயன்று இந்த அரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளேன். இந்தியாவில் பெரும்பாலும் கரியால் இயங்கும் சலவை பெட்டி முறை இந்த முறையினால் முழுவதுமாக கைவிடப்படும் எனத் தெரிவித்தார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக இந்த கண்டுபிடிப்பு உள்ளதால் 'மாணவர் பருவநிலை விருது 2020' என்ற விருதினை ஸ்வீடன் அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து வினிஷாவுக்கு 8.5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் சான்றிதழும் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பருவ நிலை மற்றும் எதிர்கால தலைமுறைக்காக சிறந்த நடவடிக்கை எடுத்த 12 முதல் 17 வயதுடைய மாணவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
மேலும், நேற்று மத்திய அரசின் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் சக்தி புரஸ்கார் என்ற விருதும் மத்திய அரசால் வினிஷாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் நாட்டில் இவர் பெற்றுள்ள இந்த விருதிற்காக பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் மாணவி வினிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்