‘நண்பன் காதலியிடம் போனில் பேசிய வாலிபர்’.. ஆத்திரத்தில் காதலன் செய்த கொடூரம்.. திருப்பூரில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பூர் அருகே காதலியிடம் போனில் பேசிய நண்பனை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

‘நண்பன் காதலியிடம் போனில் பேசிய வாலிபர்’.. ஆத்திரத்தில் காதலன் செய்த கொடூரம்.. திருப்பூரில் பரபரப்பு..!

ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த கமால்தார்சாகு (25) என்பவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கவுண்டம்பாளையத்தில் தனது நண்பர்களுடன் தங்கி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள வாழைத்தோப்பில் கமால்தார்சாகு சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றுள்ளனர்.

அப்போது வாலிபரின் தலையில் பலத்த காயம் இருந்ததை போலீசார் பார்த்துள்ளனர். இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இதனிடையே கமால்தார்சாகு உடன் தங்கியிருந்த ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த கெம்சாகர்நாயக் (30) என்பரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். அதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது கமால்தார்சாகுவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் இதுகுறித்து போலீசாரிடம் கெம்சாகர்நாயக் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில்,‘நானும் கமால்தார்சாகுவும் நண்பர்கள். இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தோம். அப்போது அங்கு பணிபுரியும் பெண்ணை நான் 6 மாதமாக காதலித்து வந்தேன். நாங்கள் இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்தோம். இதை அறிந்த கமால்தார்சாகு என் செல்போனில் இருந்த எனது காதலியின் நம்பரை எடுத்து அவருடன் பேசி வந்தார். இதுபற்றி எனக்கு தெரியவந்ததும், கமால்தார்சாகுவிடம் இதுகுறித்து கேட்டேன்.

அப்போது அவர் நான் அப்படிதான் பேசுவேன் எனக் கூறினார். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கமால்தார்சாகு என்னை தாக்கினார். இதானல் கோபமடைந்த நான் கமால்தார்சாகுவை பழிவாங்க காத்திருந்தேன். அதன்படி சம்பவத்தன்று இரவு தூங்கிக்கொண்டிருந்த கமால்தார்சாகுவின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தேன். பின்னர் அவரது உடலை அருகில் உள்ள வாழைத்தோப்பில் போட்டுவிட்டு வந்தேன். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நான் சிக்கிக் கொண்டேன்’ என கெம்சாகர்நாயக் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.