வாரிசு குடும்ப படம்.. துணிவு ஆக்ஷன் படம்.. ஆல் சென்டர் தியேட்டர் ரெஸ்பான்ஸ் என்ன? - திருப்பூர் சுப்ரமணியம்! Exclusive
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'. பொங்கலை முன்னிட்டு 11.01.2023 அன்று துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. H.வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில், போனி கபூர் தயாரித்த இப்படத்தில் நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இதேபோல் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் அதே 11.01.2023 அன்று வெளியானது. தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி 'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார். நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
வாரிசு படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார். மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி கைப்பற்றி உள்ளார். சேலம் ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார். மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி படத்தை வெளியிட்டுள்ளது.
இதனிடையே வாரிசு திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் முதல் நாளில் மட்டும் 20 கோடி ரூபாயை வசூலித்துள்ளது எனவும், நடிகர் அஜித் குமாரின் துணிவு திரைப்படம் முதல் நாளில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 21 கோடி ரூபாயை வசூலித்துள்ளது எனவும் தகவல்கள் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில் இப்படங்களின் வரவேற்பை பற்றி பேசியுள்ள தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், “வாரிசு குடும்பப் படம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே சமயம், துணிவு படம் ஆக்ஷன் படம் என்பதால், இளைஞர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்கிறார்கள். இரண்டு படங்களுமே சரிநிகரான நடிகர்கள் என்பதால் படங்கள் வரவேற்பை பெறுகின்றன. ஜனங்களும் இருவரின் படங்களையுமே பார்க்கின்றனர். இந்த படத்தை ஒருநாள் பார்க்கின்றனர். அந்த படத்தை ஒருநாள் பார்க்கின்றனர்.
இரண்டு படங்களுமே 11-ஆம் தேதி, ரிலீஸ் ஆனது. காலகாலமாகவே ஜனவரி 14-ஆம் தேதி தான் படங்கள் ரிலீஸ் ஆகும். அன்று பெரும்பாலும் போகி பண்டிகை அல்லது பொங்கல் பண்டிகை (தை 1-ஆம் தேதி) வரும். அப்பதான் ரிலீஸ் பண்ணுவாங்க. அப்போதெல்லாம் படங்கள் 50 நாட்கள் ஓடும். அதனால் வெள்ளி, சனி என கிழமை பார்க்காமல் ரிலீஸ் செய்தார்கள். இப்போது துணிவு, வாரிசு இரண்டு படங்களுமே புதன் கிழமை அன்று ரிலீஸ் ஆனபோது கூட்டம் சூப்பராக இருந்தது. வியாழன் அன்று கொஞ்சம் டல்லாக இருந்தது.
ஆனாலும் நகரங்களில் பெரிய பாதிப்பு இல்லை. கிராமப்புறங்களில் பெண்கள், குடும்பங்கள் எல்லாம் பண்டிகைகளை தான் கொண்டாடுவதில் மும்முரம் காட்டுவார்கள். படத்துக்கு போவதில்லை. எனவே வியாழன், வெள்ளி கிராமப்புறங்களில் டல்லாக இருந்தது. சனி, ஞாயிறுகளில் நகரம், கிராமம் என எல்லா இடங்களிலுமே பெரும்பாலும் ஹவுஸ்ஃபுல்லாக ஆனது. இந்த 2 படங்களும் சரிநிகரான ரெஸ்பான்ஸ் வருவதால், எந்த தியேட்டரிலும் ஒரு படத்தை தூக்கிவிட்டு இன்னொரு படத்துக்கான ஸ்கிரீனை அதிகப்படுத்துவதற்கான் வாய்ப்பே இல்லை.” என குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்