'அந்த முடிவ எடுக்கறதுக்கு முன்னாடி... அவர் சொன்ன அந்த வார்த்தை!?'.. 'இருட்டைக்கடை' ஹரிசிங்-இன் இறுதி நிமிடங்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அனைவருக்கும் இனிப்பை சுவைக்கக் கொடுத்த 'இருட்டுக்கடை' ஹரிசிங்கின் வாழ்வு கசந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலகப் புகழ் பெற்ற நெல்லை, இருட்டுக்கடை உரிமையாளரான ஹரிசிங், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், நெல்லை மக்களை மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் அல்வா பிரியர்களின் மனங்களிலும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹரிசிங்கிற்கு இரு மகள்கள். சில வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் ஒரு மகள் உயிரிழந்துவிட்டார்.
மகளின் மரணத்துக்குப் பின்னர் மனதளவில் சோர்வடைந்திருந்த ஹரிசிங், கடையில் இருக்கும்போது எல்லோரிடமும் அன்பாகவும் சிரித்த முகத்துடனும் நடந்துகொள்வார். அவருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டதால், சில தினங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 'பாசிட்டிவ்' ரிசல்ட் வந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
ஹரிசிங் மற்றும் அவரது மருமகன் கோபால் சிங் ஆகியோருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் அவர் மிகுந்த மன வேதனை அடைந்ததாகச் சொல்கிறார்கள், மருத்துவமனையில் அவரை நேரில் சந்தித்தவர்கள்.
தன்னால் பிறருக்கு துன்பம் ஏற்பட்டுவிடுவது குறித்து மிகுந்த வேதனையுடன் இருந்த அவர், மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார். 79 வயதான அவருக்கு, தன்னால் இருட்டுக்கடையின் நற்பெயருக்கே களங்கம் ஏற்பட்டுவிட்டதாக வருந்தியுள்ளார். மன அழுத்தத்தால் அவர் சிகிச்சைபெற்று வந்த மருத்துவமனையிலேயே 25-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.
"எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தெரியாமல் கடையில் இருந்து அல்வா விற்பனை செய்தேனே... அதன் மூலம் பிறருக்கும் பரவியிருக்குமே. என்னால் என் குடும்பத்தினர் எல்லோரும் தனிமைப்படுத்தப்பட்டு சிரமத்துக்கு ஆளாகிறார்களே" என மருத்துவமனை ஊழியர்களிடம் வேதனைப்பட்டிருக்கிறார்.
தற்போது இருட்டுக்கடை, இரும்புத் தகரம் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. ஹரிசிங் வீடு இருக்கும் சாமி சன்னதி தெருவையும் மாநகராட்சி சுகாதாரத் துறையினர் சீல் வைத்து விட்டனர். இருட்டுக்கடை உரிமையாளரின் மரணம், நெல்லை மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS