‘ஒரேயொரு வரதட்சணை வேணும்’!.. ‘சென்னை டாக்டரை கல்யாணம் செய்த நெல்லை சப் கலெக்டர்’.. நெகிழ்ச்சி சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தனது மனைவி டாக்டராக இருக்க வேண்டும், அவர் தனது கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மருத்துவ சேவையாற்ற வேண்டும் எனக் கூறி நெல்லை சப் கலெக்டர் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுரு பிரபாகரன். இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் கீற்று பின்னும் தொழில் செய்து வந்தனர். சிவகுருவுக்கு சிறுவயது முதலே கலெக்டராக வேண்டும் என ஆசை இருந்துள்ளது. அதனால் பெற்றோருக்கு உதவியாக கீற்று பின்னிக் கொண்டே படித்துள்ளார். தற்போது இவர் திருநெல்வேலியில் சப் கலெக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சிவகுருவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க வரன் தேடியுள்ளனர். அப்போது தனக்கு ஒரேயொரு வரதட்சணை வேண்டும் என பெற்றோரிடம் கேட்டுள்ளார். நீதான் கலெக்டர் ஆச்சே, உனக்கு என்ன வேண்டுமானலும் கொடுப்பாங்க என சொல்லியுள்ளனர். அதற்கு ‘எனக்கு ஒரு டாக்டர்தான் மனைவியாக வரவேண்டும். அவர் நம் ஊரை சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது தங்கி இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும். இதுதான் பெண்ணிடம் நான் கேட்கும் வரதட்சணை’ என சொல்லி பெற்றோரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.
பின்னர் அவர்கள் பெண் பார்க்கும் படலத்தை தொடங்கியுள்ளனர். அப்போது சென்னை நந்தனம் கல்லூரி கணிதப் பேராசிரியர் ஒருவர் அவரது மகளான டாக்டர் கிருஷ்ணபாரதியை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். இதற்கு கிருஷ்ணபாரதியும் சம்மதம் தெரிவிக்கவே சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் சிவகுரு பிரபாகரனின் சொந்த ஊரில் வைத்து விவசாயிகள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
இதுகுறித்து தெரிவித்த சப் கலெக்டர் சிவகுரு பிரபாகரன், ‘விவசாயிகள் விளையும் நிலத்தைப் பற்றி கவலைப்பட்டாலும் படுவார்களே தவிர, தங்களது உடம்பைப் பற்றி ஒருபோதும் நினைக்க மாட்டார்கள். இதனால் அவர்களது உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது கூடத் தெரியாது. ஒரு விவசாயி நன்றாக வாழ்ந்தால் இந்த நாடே நன்றாக இருக்கும் என நினைக்கிறவன் நான். அதனால்தான் எனக்கு வரப்போகும் மனைவி அடிக்கடி இங்கு தங்கி மருத்துவ சேவை செய்ய வேண்டும் என நினைத்தேன். என்னுடைய எண்ணத்தைப் புரிந்துகொண்ட கிருஷ்ணபாரதி, எல்லோரையும் நன்றாக பார்த்துப்போம் என என் கைகளை பற்றிக்கொண்டார். இதைவிட என் வாழ்நாளில் மகிழ்ச்சி இருக்க முடியாது’ என புன்னகையுடன் தெரிவித்துள்ளார். சிவகுரு பிரபாகரன் தனது ஊரில் ஏ.பி.ஜே கிராம வளர்ச்சி குழு என அப்துல்கலாம் பெயரில் அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பல நலத்திட்டங்களை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
News Credits: Vikatan