'லட்சக்கணக்குல வசூல்'..கெடைச்சது ரூ.2500?...ஜீவசமாதி நஷ்டத்த விசாரிங்க!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சில நாட்களுக்கு முன் சிவகங்கை மாவட்டத்தில் ஜீவசமாதி அடையப்போவதாக சொன்ன இருளப்பசாமி என்னும் சாமியார் இறைவன் உத்தரவு கிடைக்கவில்லை என்று கூறி தன்னுடைய ஜீவசமாதியை நிறுத்தி வைத்தார். இவர் நாடகமாடினர் என தெரிந்தாலும் அவர்மீது கைது நடவடிக்கை இருக்காது என மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் ஜீவசமாதி ஏற்பாட்டின்போது அன்னதானம் வழங்கியதில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது.எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகேசன் என்பவர் புகார் அளித்திருந்தார்.இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் இருளப்பசாமியின் மகன் கண்ணாயிரம் மற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கண்ணன், ஆனந்த், உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.முதற்கட்டமாக 3 நபர்களை கைது செய்துள்ளதுடன் தப்பிச் சென்ற கர்ணன், லெட்சுமணன் மற்றும் பலரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், நிகழ்ச்சியில் காப்புக்கட்டி பணிகள் செய்த 11 பேரிடமும் விசாரணை நடந்துவருகிறது.
ஜீவசமாதி அடையப்போவதாக உண்டியல் மூலம் பணம் வசூல் செய்திருந்தனர். உண்டியல் மூலம் பல லட்சம் ரூபாய் வசூலானது எனத் தகவல் வெளியான நிலையில், சம்பவ இடத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலைக் கைப்பற்றி போலீசார் சோதனை செய்தபோது, அதில் வெறும் 2,500 ரூபாய் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்தும் கைதானவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.