'நள்ளிரவில் நடந்த கோரம்'...'சுக்குநூறாக தெறித்த கார்'... பலியான 'துணை சபாநாயகரின்' உறவினர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகரின் உறவினர்கள் 4 பேர் பலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையின் வழியே சரக்கு போக்குவரத்திற்காக, பெரிய கண்டெய்னர்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். இதனால் இந்த சாலை எப்போதுமே பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் நேற்று இரவு 11.30 தூத்துக்குடியில் இருந்து கன்டெய்னர்களில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
இதைப்போல எதிர்திசையில் மதுரையிலிருந்து தூத்துக்குடி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. காரில் 2 பெண்கள், 2 ஆண்கள் என 4 பேர் பயணம் செய்தனர். லாரி ஸ்டெர்லைட் ஆலையின் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக லாரியும் - காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் காரில் வந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்து குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டார்கள்.
அப்போது போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்த 4 பேரும், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் சகோதரர் சுபாஷ் சந்திபோஸின் பேரன் நீரேந்திரன், ரம்யா, ரம்யாவின் தோழி பார்கவி மற்றும் ஓட்டுநர் ஜோகன் ஆகியோர் என தெரியவந்துள்ளது. இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இந்த கோர விபத்தின் காரணமாக தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.