100 வருஷமா பொங்கலே கொண்டாடாத மக்கள்.. வினோத கிராமத்தின் திகில் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 100 வருடங்களாக பொங்கல் பண்டிகையே கொண்டாடப்படுவது கிடையாது. இதன் பின்னணியில் உள்ள காரணம் தான் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
Also Read | ஆத்தாடி மைனஸ் 50 டிகிரி குளிரா.. அசால்ட்டாக டீல் செய்யும் மனிதர்கள்.. எங்கய்யா இருக்கு இந்த ஊரு?.
பொங்கல் பண்டிகை தமிழர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. உழவின் சிறப்பை கொண்டாடும் விதத்தில் நடைபெறும் இந்த பண்டிகை தை முதல் நாள் அன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகள் பொங்கல் பண்டிகை பெரிய அளவில் கொண்டாடப்படாத நிலையில் தற்போது நிலைமை மாறியுள்ளது. ஆனால், நாமக்கல் அருகே உள்ள கிராமம் ஒன்றில் கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதே கிடையாது என்கிறார்கள் அந்த ஊர் மக்கள்.
நாமக்கல்லில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிங்கிலிபட்டி என்னும் கிராமம். தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் இந்த கிராமத்தினர் மட்டும் கடந்த 100 ஆண்டுகளாகவே பொங்கல் பண்டிகையை தவிர்த்து வருகின்றனர். மேலும், பொங்கல் வைத்தால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் எனவும் மக்கள் அஞ்சுவதாக சொல்லப்படுகிறது.
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன், கிராம மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர். அப்போது, படையல் வைக்கப்பட்ட பொங்கலை நாய் ஒன்று சாப்பிட்டிருக்கிறது. இதனை அபசகுணமாக மக்கள் கருதவே, பொங்கல் கொண்டாட்டம் அந்த வருடம் கைவிடப்பட்டிருக்கிறது. அடுத்த வருடம் பொங்கல் வைக்கும்போது ஊரில் இருந்த கால்நடைகள் சில மரணமடைந்ததாக தெரிகிறது.
இதனால் அஞ்சிய கிராம மக்கள், பொங்கல் வைப்பதையே தவிர்த்திருக்கின்றனர். மேலும், இந்த கிராமத்தில் இருந்து திருமணமாகி வெளியூர் செல்லும் பெண்களும் தங்களது வீட்டில் பொங்கல் வைப்பது இல்லை என சொல்கிறார்கள் உள்ளூர் மக்கள். இருப்பினும், கிராமத்தில் உள்ள கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சில வருடங்களுக்கு முன்னர் ஊரின் தலைவர் அனைவரும் பொங்கல் வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொங்கலும் வைத்ததாகவும் அப்போது அவரது வீட்டில் இருந்த மாடு இறந்ததாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், தற்போது நிலைமை மாறியுள்ளதாகவும் ஒருசிலர் பொங்கல் பண்டிகையை கொண்டாடிவருவதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read | "அந்த காலத்தில் தமிழ்நாடு என்பது இல்லை".. 'தமிழ்நாடு சர்ச்சை'.. ஆளுநர் பரபரப்பு விளக்க அறிக்கை..!
மற்ற செய்திகள்