‘கொரோனா வைரசை கட்டுப்படுத்த இதுதான் ஒரே வழி’... ‘சீனா வுஹான் நகரத்தில் வாழும்’... ‘இந்திய விஞ்ஞானிகளின் வழிகாட்டல்கள்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டு 100 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அந்த வைரஸால் உலகமே முடங்கியுள்ளது. இந்நிலையில் லாக் டவுனிலும் வெளியேறாமல், சீனாவின் வுஹான் நகரில் வசிக்கும் இந்திய விஞ்ஞானிகள் கொரோனா வைரசை கட்டுப்படுத்த வழிகாட்டியுள்ளனர்.
சுமார், 1 கோடியே 10 லட்சம் பேர் வாழும் வுஹான் நகரில், வாழ்ந்துவரும் கேரளாவைச் சேர்ந்த நீரியல் உயிரித்துறை (Hydrobiolgist) விஞ்ஞானி, அருண்ஜித் டி சத்ரஜித் கூறுகையில், “லாக் டவுனால் 73 நாட்களாக நான் என் அறையில்தான் அடைப்பட்டுக் கிடந்தேன். கடந்த புதன்கிழமை லாக் டவுன் நீக்கப்பட்டப் பிறகு, இப்போதுதான் வெளியே வந்துள்ளேன். எல்லோருமே தங்கள் அறைகளில் அடைபட்டுக் கிடந்ததால் என்னுடன் பேசுவதற்கே ஆள் இல்லை.
நானும் யாருடனும் அதிகமாக பேசவில்லை. அதனால் இப்போது பேசுவதற்கே கஷ்டப்படுகிறேன். டிசம்பர் 2-வது வாரத்தில்தான் வுஹானில் ஒரு கொடிய வைரஸ் தோன்றி பரவி வருகிறது என்று எனக்கும், எனது நண்பர்களுக்கும் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து மக்களிடம் பீதி நிலவியது. பொதுவாகவே ஒரு இடத்தில் கஷ்டம் ஏற்படுகிறபோது, அங்கிருந்து வருவது என்பது, அதில் இருந்து தப்பிப்பது போலாகும். அப்படி செய்வது இந்தியர்களுக்கு அழகு இல்லை.
அதனால்தான் நான் இங்கேயே இருந்து துணிச்சலுடன் போராடுவது என முடிவு செய்தேன். அது மட்டுமல்ல, நான் ஊர் திரும்பினால், அது எனது மனைவி, குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, என் அப்பா, அம்மா, மாமனார், மாமியார் என அத்தனை பேருக்கும் ஆபத்தானது என்றும் நினைத்தேன். இந்தியா 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது, சரியான செயல்தான். இந்த வுஹான் நகரம் வழங்கும் பாடம், கண்டிப்பான ஊரடங்கு உத்தரவை பின்பற்றியதும், மக்கள் தங்களைத்தாங்களே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியதும்தான்.
இப்போது ஊரடங்கை விலக்கிய பின்னரும்கூட, அறிகுறிகள் இல்லாமலேயே (Asymptomatic) அந்த வைரஸ் தாக்குகிறது என்று தகவல்கள் வெளியாகி இருப்பதால் மக்கள் இன்னும் வீடுகளை விட்டுவெளியே வர தயங்குகிறார்கள்” என்கிறார். இதேபோல், மற்றொரு விஞ்ஞானி கூறுகையில், “நான் எனது அறையில் 72 நாட்கள் அடைப்பட்டுக் கிடந்தேன். என் பக்கத்து வீட்டுக்காரருக்கு 3 சின்னக் குழந்தைகள்.
அவர்கள், அவர்களது வீட்டில் இருந்து ஒரு முறைகூட வெளியே வந்ததை நான் பார்க்கவில்லை. இன்றைக்கு நான் உயிர்பிழைத்து நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறேன். ஆனால் வைரஸை பரப்ப வழியாகி விடக்கூடாது என்பதற்காக, இன்றைக்கும் நான் வெளியே பழையபடி செல்ல விரும்பவில்லை. நான் இந்திய மக்களுக்கு சொல்வதற்கு ஒரு ஆலோசனை உண்டு. ஊரடங்கை நீங்கள் அனைவரும் கண்டிப்புடன் பின்பற்றுங்கள்.
இதே வுஹானில் சில தினங்கள் முன்கூட்டியே ஊரடங்கு போட்டிருந்தால் காட்டுத்தீ போல இந்த வைரஸ் பரவுவதை தடுத்து இருக்க முடியும். எனக்கு இங்கு நல்ல விருந்தோம்பல் அனுபவம் கிடைத்தது” என்கிறார். இவர்கள் போல் பலரும் ஊரடங்கு மற்றும் தனி மனிதன் விலகலே கொரோனா வைரசை கட்டுப்படுத்த சரியான வழி என்று கூறி வருகின்றனர்.