RRR Others USA

ஏன் சார் 'டல்லா' இருக்கீங்கனு வந்து கேட்பியே டா! பேரிடியாக விழுந்த மாணவனின் மரணம், உருக வைக்கும் ஆசிரியரின் பதிவு

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருவாரூர்: திருவாரூர் அரசு பள்ளியில் படித்து வந்த எட்டாம் வகுப்பு மாணவன் திடீரென மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் சார் 'டல்லா' இருக்கீங்கனு வந்து கேட்பியே டா! பேரிடியாக விழுந்த மாணவனின் மரணம், உருக வைக்கும் ஆசிரியரின் பதிவு

திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பட்டி, புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியில் படித்து வந்த எட்டாம் வகுப்பு மாணவன் பாலபாரதி திடீரென மரணமடைந்தார். இது அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த மாணவன் சுறுசுறுப்பாகவும் மிகவும் திறமையாக படிக்க கூடியவர். இதுகுறித்து அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களில் ஒருவரான செல்வம் சிதம்பரம் உருக்கமான பதிவை முகநூலில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு அனைவரையும் உருக வைக்கும் விதமாக உள்ளது.

ஆசிரியரின் உருக்கமான பதிவு:

அவர் எழுதியுள்ள அந்த பதிவில், "பாலபாரதி  ஐந்தாம் வகுப்பு வரை மங்களூர் தொடக்கப்பள்ளியில் படித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆறாம் வகுப்பு எம்பள்ளியில் சேர்ந்தான்.அவன் சேர்ந்த அன்றே அந்த பள்ளியின் ஆசிரியர் சகோதரி தொலைபேசியில் கெட்டிக்கார பையன்,நல்லா படிப்பான்,அழகா பேசுவான் என்றார்.

Thiruvarur govt School student balabharathi died suddenly

வந்து சேர்ந்த அன்றே என்னிடம் ஒட்டிக் கொண்டான். சிரமமான குடும்ப பின்னணியிலிருந்து வந்தாலும் தன்னம்பிக்கை மிகுந்த பேச்சு,பெரிய மனிதர் போல பேச்சில் முதிர்ச்சி, காலையில் வந்தவுடன் எனக்கு தேடிப்பிடித்து வணக்கம் சொல்லிச் செல்வான்.

ஆறாம் வகுப்பு சேர்ந்த புதிதில் விளையாடும் போது கீழே விழுந்து சிறு காயம் ஏற்பட்டது. உடனே அருகில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றேன் மூன்று தையல் போட்டார் பெண் மருத்துவர். தையல் போட்டு முடித்த உடனே இரண்டு கைகளையும் கூப்பி மருத்துவரை நோக்கி ரொம்ப நன்றி டாக்டர் வலிக்கவே இல்லை என்றும்,கைகளை கூப்பியவாறே என்னை நோக்கி உங்களுக்கும் நன்றி சார் உடனே என்னை ஹாஸ்பிடல் அழைத்து வந்ததற்கு என்றான். சுற்றி இருந்த டாக்டர்,செவிலியர் ஆகியோர் பயங்கரமாக சிரித்துக்கொண்டே இப்படியெல்லாம் பேசவேண்டும் என்று சொல்லித்தந்து அழைத்துவருவீர்களோ சார் என என்னை கிண்டல் செய்தார்கள்.

Thiruvarur govt School student balabharathi died suddenly

மற்ற மாணவர்களை போல ஆசிரியர்களை தவிர்க்காமல் பல கேள்விகள் கேட்பான். சில நேரம் நாம் சோர்வாக இருந்தால் ஏன் சார் டல்லா இருக்கீங்க என அக்கறையோடு விசாரிப்பான். 6,7,8  மாணவர்கள் டை,பெல்ட் அணிந்து வரவேண்டும் என ஏற்பாடு செய்து தந்தோம்.நாங்கள் தந்த டை-யை தொலைத்துவிட்டு வீட்டில் வாங்கி தரச்செய்து மிக நீளமான டை-யை அணிந்து வந்தான். இந்த டை உனக்கு பொருந்தவில்லை பாலபாரதி, வேறு டை உனக்கு வாங்கித் தருகிறேன் என்றேன். அதற்கு அவன் நீளமோ, கட்டையோ டை போட்டாலே  கெத்துதானே சார்.

 

யார் கிண்டல் செய்தால் நமக்கென்ன என்று பதில் அளித்து வியக்க வைத்தான். அன்றுதான் இந்த புகைப்படத்தை எடுத்து என் மனைவியிடம் காண்பித்து அவன் கெட்டிக்காரத்தனத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.பெரிய ஆளா வருவாங்க என்றார் என் மனைவி. அரசு மருத்துவர் மாரிமுத்து அவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்கள் உடல் பரிசோதனை செய்ய வந்த போது பாலபாரதியின் பேச்சில் அசந்து அவன் பேசுவதை வீடியோ எடுத்து எல்லா ஸ்கூல்லயும் இதை காண்பிக்கிறேன் தம்பி என்றார்.

Thiruvarur govt School student balabharathi died suddenly

இப்பொழுது எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தான். ஒரு வாரமாக பள்ளிக்கு வரவில்லை. தொலைபேசியில் விசாரித்த போது  கொஞ்சம் உடல்நிலை சரியில்லை என்றார்கள். நேற்று காலை இறந்துவிட்டார் என்ற செய்தி என் காதுகளில் இடியாய் இறங்கியது. நேரில் சென்றபோது மஞ்சள் காமாலை என்று கூறினார்கள். அந்த தாய்,தந்தை, தாத்தா,பாட்டி எங்களை கண்டு கதறி நின்ற நிலையை கண்டு எங்களால் தாங்க இயலவில்லை.

அனைவரையும் கவரும் பேச்சு பெரிய மனிதரை போல் பண்பாடு, ஆசிரியர்களை மதிக்கும் அன்பு, சிறப்பான படிப்பு பெரிய ஆளாய் வருவடா பாலபாரதி என உன்னை என் வாயார பலமுறை கூறுவேனே. ஆலமரமாய் வளர்ந்து பலருக்கு நிழல் தருவாய்  என நினைத்தோமே  அனைவரையும் தவிக்கவிட்டுச்சென்றாயே. சாதாரண மனிதர்களுக்கே உன்மேல் ஆசை இருக்கும் போது ஆண்டவனுக்கு உன் மேல் ஆசை இருக்காதா? அதனால்தானோ அந்த ஆண்டவனே உன்னை ஆசைப்பட்டு அழைத்துக் கொண்டான் போல.

அந்த குழந்தையை இழந்து வாடும் பெற்றோருக்கு காலம் நல்ல மருந்தை இட வேண்டும். ஆழ்ந்த இரங்கல் பாலபாரதி." என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

THIRUVARUR, GOVT SCHOOL, BALABHARATHI, DIED, திருவாரூர், பாலபாரதி, செல்வம் சிதம்பரம், மரணம்

மற்ற செய்திகள்