'ஐயா...! எங்க வீடுகளை காணோம்யா...' 'கண்டு புடிச்சு கொடுங்க...' 'வடிவேலு காமெடி போல்...' - புகார் அளித்த பொதுமக்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவாரூர் மாவட்டத்தில் 140 பேர் தங்களின் வீடு காணவில்லை என போலீசில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அருகேயுள்ள தலையாமங்கலம் என்ற கிராமத்தில் 140 குடும்பங்கள் தங்களின் சொந்த வீடு காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர். மத்திய அரசு அறிவித்த பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 225 நபர்களுக்கு இலவசமாக வீடு கட்டிக்கொள்ள, தலையாமங்கலம் ஊராட்சியில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அனுமதி அளிக்கப்பட்ட 225 பேரில் 140 பேருக்கு வீடுகட்டி தரவில்லை எனவும், ஆனால் அவர்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயார் செய்து பத்திரப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கின்ற்றனர். மேலும் முன்னாள் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் கூட்டணி அமைத்து மோசடி செய்துள்ளதாக பயனாளிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மோசடியில் சுமார் 5 கோடி ரூபாய் கையப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் மத்திய அரசின் கழிவறை கட்டும் திட்டத்திலும், 170 நபர்களுக்கு கழிவறைகளைக் கட்டாமலே கட்டியது போல பயனாளிகளின் பெயரில் போலி ஆவணங்கள் தயார் செய்துள்ளனர்.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தலையாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சேகர், இளவரசி, லட்சுமி உள்ளிட்ட 22 நபர்கள், காவல்நிலையத்தில் தனித்தனியாக இந்த மோசடி குறித்து புகார் அளித்துள்ளனர்.
காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், 'பட்டா நிலத்தில் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய வீடுகட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டப் பட்டுள்ளதாக அரசு பதிவேட்டில் பதிவாகிய நிலையில், எங்களுக்கு சொந்தமான இடத்தில் கட்டப் பட்டதாக சொல்லப்படும் வீட்டை காணவில்லை. அந்த வீட்டை கண்டுபிடித்து தரவேண்டும்' எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்