"பூஜை செஞ்சா.. மாமியார் - மருமகள் சண்டை நீங்கும்.. நகை 2 மடங்காகும்".. நூதனமாக உருட்டிய ஆசாமி.. நம்பிய பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிறப்பு பூஜை செய்தால் வீட்டில் உள்ள தங்க நகைகள் இரண்டு மடங்காக அதிகரிக்கும் எனவும், மாமியார் - மருமகள் சண்டை தீரும் எனக்கூறி தங்க நகைகளை திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் வலை வீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
Also Read | கடும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்.. Zoo மேல கை வைக்க முடிவெடுத்த அதிகாரிகள்.. நொறுங்கிப்போன மக்கள்..!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கெங்காபுரம் பகுதியில் அமைந்திருக்கிறது புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில். அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் இந்த கோவிலுக்கு திரளாக செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று செவ்வாய் கிழமை என்பதால் கோவிலில் கூட்டம் அதிகம் இருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த ஒருவர் தான் சிறப்பு பூஜைகளை செய்வதாகவும் அதன் மூலம் வீட்டில் உள்ள சிரமங்களை தன்னால் தீர்க்க முடியும் என கூறியுள்ளார்.
மாமியார் - மருமகள் சண்டை நீங்கும்
மேலும், வீட்டில் மாமியார் - மருமகள் சண்டை நீங்கவும், வீட்டில் இருக்கும் தங்க நகைகளை இரண்டு மடங்காக அதிகரிக்கவும் சில சிறப்பு பூஜைகளையும் தன்னால் செய்ய முடியும் என அந்நபர் கூறியுள்ளார். இந்த சிறப்பு பூஜையை மேற்கொள்ள வீட்டில் உள்ள தங்க நகைகளை எடுத்துவரும்படியும் அங்கிருந்த பெண்களிடம் அவர் கூறியுள்ளார். இதனை சில பெண்கள் நம்பவும் செய்திருக்கிறார்கள்.
அப்படி வாலிபரின் வார்த்தையை நம்பிய அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடனடியாக தனது வீட்டுக்கு சென்று 4 பவுன் நகைகளை கொண்டுவந்து வாலிபரிடம் கொடுத்திருக்கிறார். அந்த நகையை இரட்டிப்பாக்கி தரும்படி பெண் கூறவே, அதனை வாங்கிய வாலிபர் பூஜை செய்வது போல பாசாங்கு செய்திருக்கிறார். அப்போது அந்த பெண்மணி அசந்த நேரத்தில் இருசக்கர வாகனத்தில் நகையுடன் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார் வாலிபர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் கதறி அழவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அதுபற்றி விசாரித்திருக்கிறார்கள். அப்போதுதான் உண்மை தெரியவந்திருக்கிறது.
புகார்
இதனையடுத்து அந்த பெண் ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அப்பகுதியில உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு அந்த வாலிபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். நகைகளை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி பெண்ணிடம் நகையை பெற்று வாலிபர் தப்பியோடிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்