'பிரபல அரசியல் தலைவர் வீட்டில் புகுந்த திருடர்கள்'... 'ஒரு 100 ரூபாய் கூட வைக்க மாட்டீங்களா'... விரக்தியில் 'லிப்ஸ்டிக்கை' வைத்து செய்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருட போன இடத்தில் காசு இல்லாததால் திருடர்கள் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. சென்னையில் இருக்கும் பலருக்கும் வார இறுதி நாட்களில் ஒரு சிறிய பயணமாகச் செல்ல ஏலகிரி மலை எப்போதுமே முதல் விருப்பமாக இருந்து வருகிறது. இந்த மலையைச் சுற்றி 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இதுதவிர வசதி படைத்தோர்களின் பண்ணை வீடுகள், சொகுசு பங்களாக்கள், தங்கும் விடுதிகள் ஆகியவையும் ஏராளமாக உள்ளன. அந்த வகையில் ஏலகிரி மலை மஞ்சம்கொள்ளை புதூர் என்ற மலை கிராமத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்குச் சொந்தமான பண்ணை வீடு ஒன்று உள்ளது. துரைமுருகனுக்கு ஓய்வு தேவைப்படும்போது அந்த பங்களாவில் தன் குடும்பத்தாருடன் வந்து தங்குவது வழக்கம். இந்தப் பண்ணை வீட்டை அதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் பராமரித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 11-ம் தேதி துரைமுருகன் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்ததாக, காவலாளி பிரேம்குமார் ஏலகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். அப்போது வீட்டிலிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவின் ‘ஹார்ட் டிஸ்க்’ மட்டும் திருடிச் சென்றது தெரியவந்தது. திருட வந்தவர்கள் தங்களைப் பற்றிய அடையாளத்தை அழிக்கவே துரைமுருகன் வீட்டிலிருந்த ஹார்ட் டிஸ்கைத் திருடியிருக்கலாம் எனக் காவல் துறையினர் சந்தேகித்தனர்.
இதற்கிடையே துரைமுருகன் வீட்டில் நடந்த திருட்டுச் சம்பவத்தை வேலூர் சரக டிஐஜி காமினி, திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் மற்றும் காவல் துறையினர் நேரில் ஆய்வு செய்ய ஏலகிரி மலைக்குச் சென்றனர். அப்போது, துரைமுருகன் வீட்டுக்கு அருகாமையில் உள்ள வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? அங்குச் சென்றால் ஏதாவது தடயம் கிடைக்குமா எனக் காவல் துறையினர் எண்ணினர்.
அதன்படி, வாணியம்பாடியைச் சேர்ந்த தனியார்ப் பள்ளி தாளாளருக்குச் சொந்தமான கொகுசு வீடு, துரைமுருகனின் வீட்டுக்கு அருகாமையிலிருந்தது. அந்த வீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த கணவன்- மனைவி இருவர் காவலுக்கு இருப்பது தெரியவந்தது. அந்த வீட்டுக்குச் சென்ற காவல் துறையினர் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும் எனக் கேட்டு அந்த வீட்டுக்குள் சென்றனர்.
வீட்டின் மேல் மாடிக்குச் சென்றபோது அங்கு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அங்கும் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது. அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டும், பொருட்கள் கீழே சிதறிக் கிடப்பதையும் காவல் துறையினர் கண்டனர். அந்த வீட்டில் நகையோ, பணமோ இல்லாததால் திருடர்கள் விரக்தியின் உச்சத்திற்குச் சென்றனர்.
பின்னர் வீட்டிலேயே சீட்டுக் கட்டைக் கொண்டு சூதாடிவிட்டுப் போகும்போது, அதன் சுவரில் லிப்ஸ்டிக் கொண்டு ‘ஒரு 100 ரூபாய் கூட வைக்க மாட்டியா’ என்றும், ‘ஒரு ரூபாய் கூட இல்ல, எடுக்கல’ என எழுதி வைத்துவிட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் காவல் துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாகத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.
அதனடிப்படையில் ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 3 பேரைச் சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். துரைமுருகன் மற்றும் அவரது பக்கத்து வீட்டில் திருட்டுச் சம்பவத்தை நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்ற செய்திகள்