'தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு குறித்து'... 'முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர்'... 'மருத்துவ நிபுணர் குழுவின் முக்கிய தகவல்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) துணை இயக்குநர் பிரதீப் கவுர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர் பழனிசாமியுடனான ஆலோசனைக்குப் பிறகு பேட்டி அளித்த மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர் கூறியதாவது, கொரோனா பாதிப்பு அனைத்து மாவட்டங்களிலும் சம அளவு இல்லை.
கொரோனா தொற்று நீண்ட நாட்களாக நம்முடன் இருக்கும். அதனால் நமது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த இரு வாரங்களில் இரட்டிப்பாகியுள்ளது. கொரோனா வைரஸ் உடனடியாக முழுமையாக கட்டுக்குள் வராது. தமிழகத்தை பொருத்தவரை ஒரே நேரத்தில் பொது ஊரடங்கை தளர்த்த முடியாது. இங்கு ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும்.
இதற்காக சில நடைமுறைகளை பின்பற்றுமாறு ஆலோசனை வழங்கியுள்ளோம். தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோய் உள்ளவர்கள் முறையாக சிகிச்சையை கடைப்பிடிக்க வேண்டும்.
சில இடங்களில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்த ஆலோசனைகளை வழங்கியுள்ளோம். கடந்த வாரத்தில் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. தனிமைப்படுத்துதல், கண்காணிப்பு போன்றவற்றை செய்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.