'யாரும் முன்வரல'... 'குண்டும் குழியுமாக இருந்த சாலை'... 'களத்தில் இறங்கிய காவலர்'... குவியும் பாராட்டு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குண்டும், குழியுமாக இருந்த சாலையைத் தனி ஒரு ஆளாகச் சரி செய்த காவலருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தேனி மாவட்டம் கம்பத்தில் கடந்த சில நாள்களாகக் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகச் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் நகரின் பெரும்பாலான இடங்கள் குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் வாகனங்களில் செல்வோர் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில் கம்பம் பகுதி போக்குவரத்து காவலர் தாமரை மாணிக்கம், தனி ஆளாக மண்வெட்டி, ஜல்லி கற்கள் ஆகியவற்றைக்கொண்டு சாலையைச் சீரமைக்கத் தொடங்கினார்.
இதனிடையே தனி ஆளாகச் சாலையைச் சீர் செய்த காவலரைப் பார்த்த பொதுமக்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் அதைக் குறித்து கவலை கொள்ளாமல் 2 மணி நேரத்திற்கும் மேலாகச் சாலையைச் சீரமைத்து பள்ளங்களைச் சமன் செய்தார். அவரின் இந்த நடவடிக்கையால் தற்போது வாகன ஓட்டிகள் எவ்வித சிரமமின்றி சாலைகளில் பயணித்து வருகின்றனர்.
காவலர் சாலையைச் சரி செய்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவிய நிலையில், இந்த விஷயம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் கவனத்திற்குச் சென்றது. பலரும் காவலர் தாமரை மாணிக்கத்தின் பணியைப் பாராட்டிய நிலையில், காவலரின் சேவைக்காக வெகுமதி வழங்கப்படும் எனத் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்