'மரங்களை காப்பாற்றிய இளைஞர்கள்...' வேரோடு பிடுங்கி எடுத்து...' 'அப்படியே அலேக்கா 45 கிலோ மீட்டர் தூக்கிட்டு போய்...' வேற இடத்துல நட்டுருக்காங்க...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீடு கட்டுவதற்கு தடையாக இருந்த மரத்தை மீட்டு 45 கிலோ மீட்டர் தூக்கிச் சென்று வேறு இடத்தில் நட்ட இளைஞர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் நக்கம்பாடி கிராமத்தில் விவசாயி ஒருவர் அவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட தீர்மானித்துள்ளார். அந்நிலத்தில் அரச மரத்துடன் இணைந்த பனைமரம் இருந்ததுள்ளது. வீடு கட்டுவதற்கு தடையாய் இருக்கும் அந்த இரு மரங்களையும் வெட்ட திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவத்தை அறிந்த சோலைவன இளைஞர்கள் குழு ஒன்று மரத்தைக் காப்பாற்றும் நோக்கத்துடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தொடர்புக் கொண்டு, பனை மரம் மற்றும் அரச மரத்தை அவர்களது அலுவலக வளாகத்தில் வைக்க அனுமதி பெற்றனர்.
இதையடுத்து ஜேசிபி வாகனம் மூலம் நக்கம்பாடி ஊர்த் தலைவரின் உதவியோடும், இரு மரங்களையும் வேரோடு பிடுங்கியுள்ளனர். பின்னர் மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் வாகனத்தில் ஏற்றி சுமார் 45 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு அரியலூரில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மரத்தை நட்டுள்ளனர் .
இந்த சம்பவம் அப்பகுதி மக்களை மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் பரவி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. மேலும் இந்த சோலைவனம் குழு இளைஞர்கள் சாலை விரிவாக்கத்திற்காக மற்றும் வேறு பல திட்டங்களுக்காக வெட்டப்படும் மரங்களை மீட்டு வேறொரு இடத்தில் நட்டு, மரங்களுக்கு மட்டுமில்லாமல் எதிர்கால சந்ததிகளுக்கும் மறுவாழ்வு அளிக்கின்றனர் எனலாம். மேலும் இந்த குழு இளைஞர்களின் முயற்சியை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
மற்ற செய்திகள்