‘அந்த தடையை உடைச்சது பிரதமர் மோடிதான்’.. தாராபுரம் பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் புகழாரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உண்மையான ஜல்லிக்கட்டு கதாநாயகன் பிரதமர் மோடிதான் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகழ்ந்து பேசியுள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தாராபுரம் (தனி) தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் எல்.முருகன் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று (30.03.2021) பங்கேற்றார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ‘பிரதமர் மோடியின் வருகையால் தேர்தலில் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். இந்தியாவை இருளுக்குள் தள்ளிய கட்சி காங்கிரஸ். காங்கிரஸ்-திமுக கூட்டணி தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. காங்கிரஸும், திமுகவும் சேர்ந்து கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் ஆண்டன. ஆனால், அந்த இரு கட்சிகளும் இந்தியாவுக்கு எவ்வித பிரம்மாண்டமான திட்டங்களையும் கொண்டு வந்து சேர்க்கவில்லை. தமிழகத்துக்கும் எந்த திட்டத்தையும் கொண்டு வந்து சேர்க்கவில்லை.
காங்கிரஸ்-திமுக ஆட்சியில் இருந்த போதுதான் காளை, விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதன் காரணமாகத்தான் நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. அந்த ஜல்லிக்கட்டு தடையை உடைத்தெறிந்த பெருமை மோடியையே சேரும். உண்மையான ஜல்லிக்கட்டு கதாநாயகன் பிரதமர் மோடிதான்’ என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
மற்ற செய்திகள்