உக்ரைன் வாழ் தமிழர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் .. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் தாயகம் திரும்புவதற்கான பயண செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ரஷ்யாவின் ஏவுகணைகள், போர் விமானங்கள் உக்ரைன் உள்ளே சென்று தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை தலைநகர் கிவிவ் நோக்கி ரஷ்யாவின் படைகள் முன்னேறி வருகிறது. அங்கு காலையில் இருந்து மிக தீவிரமாக ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. உக்ரைனில் இருந்து இதனால் இந்திய மாணவர்கள் பலர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
தமிழக மாணவர்கள்
உக்ரைனில் சுமார் 5000க்கும் அதிகமான தமிழக மாணவர்கள் மருத்துவம் உள்ளிட்ட உயர் படிப்புகளை படித்து வருகிறார்கள். இவர்கள் தற்போது உக்ரைனில் நாடாகும் போர் காரணமாக அங்கு அகதிகள் முகாமில் தங்கி உள்ளனர். இன்னும் சிலர் அங்கு இருக்கும் பதுங்கு குழிகளில் தங்கி உள்ளனர். இந்நிலையில், உக்ரைன் நாட்டில் ரஷ்யா ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அங்கு குடியேறியவர்களை சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதினார்.
முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
உக்ரைனில் படிக்கும் மாணவர்களின் குடும்பத்தினரிடமிருந்து நூற்றுக்கணக்கான துயர அழைப்புகளைத் தாம் பெற்றுவருவதால், அவர்களை அவசரமாக உக்ரைனிலிருந்து இந்தியாவிற்கு அழைத்து வர மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை விடுத்தார். இருப்பினும், உக்ரைன் விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிப்புகள் வெளியானது. இதனால், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
இந்நிலையில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான பயணச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஷ்ய ராணுவம் 24-2-2022 அன்று உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து, இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் தமிழ்நாட்டைச் சார்ந்த சுமார் 5,000 மாணவர்கள், பெரும்பாலும் தொழில்முறை கல்வி பயில்வோர் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கித் தவிக்கின்றனர்.
பயண செலவு
இன்று (25-2-2022) காலை 10-00 மணி வரை தமிழ்நாட்டைச் சார்ந்த 916 மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் தமிழ்நாடு அரசை தொடர்பு அலுவலர்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் உக்ரைனில் இருந்து தாய்நாடு திரும்புவதற்கு ஏற்படும் பயணச் செலவுகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும்.
தொடர்பு எண்கள்
இது தொடர்பாக மாநில தொடர்பு அலுவலரான ஜெசிந்தா லாசரஸை தொடர்பு கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தொடர்பு எண்கள் மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் கட்டணமில்லா தொலைபேசி எண் - 1070 ஜெசிந்தா லாசரஸ், ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும், மறுவாழ்வு ஆணையரகம் - 9445869848, 9600023645, 9940256444 மின்னஞ்சல் nrtchennai@gmail.com உக்ரைன் அவசர உதவி மையம் தமிழ்நாடு பொதிகை இல்லம். வாட்ஸ்அப் எண் 9289516716, டெல்லி - .044-28515288 மின்னஞ்சல் : ukrainetamils@gmail.com" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்