எங்கள பிரிச்சிடாதீங்க.. காரை விடாமல் துரத்திய பசு.. நெகிழ வைக்கும் பாசப்போராட்டம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிவகங்கை: பசு ஒன்று தன் கன்றை எங்கோ எடுத்து செல்கிறார்கள் என நினைத்து சுமார் 2 கிலோமீட்டர் காரை துரத்தி வந்த சம்பவம் சிவகங்கையில் நடந்துள்ளது.
இன்றைய நவீன காலத்தில் ஒரு சிலர் தாங்கள் பெற்ற பிள்ளைகளை நடுத்தெருவில் விட்டு செல்லும் கதைகள் எல்லாம் தினம் ஒரு செய்தித்தாளில் பார்க்கிறோம். 6 அறிவு இருக்கிறதென்று சொல்லி கொள்ளும் மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட பசுவின் பாசப்போராட்ட கதை தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பகுதியில் இருக்கும் கண்டரமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வீட்டில் பசு ஒன்றை வளர்த்து வந்தார். கருவுற்றிருந்த அந்த பசு மாட்டை மேய்ச்சலுக்காக பொன்னான்குடி பகுதியில் உள்ள வயல்வெளியில் விட்டு இருந்தனர்.
காளை கன்று:
இந்த நிலையில் அந்த பசு அங்கேயே அழகிய காளை கன்றுவை பெற்றுள்ளது. இதனால் பசு மாட்டையும், அதன் கன்றையும் ஒரு நாள் முழுவதும் அங்கேயே வைத்து பராமரித்துள்ளனர். அடுத்த நாள் அதாவது நேற்று முன்தினம் காலையில், அங்கிருந்து தங்களது வீட்டில் உள்ள தொழுவத்திற்கு பசு மற்றும் கன்றுக்குட்டியை கொண்டு வர முயற்சி செய்துள்ளார்.
நடக்க முடியவில்லை:
பிறந்து ஒரு நாளே ஆன அந்த குட்டியால் நடக்க முடியவில்லை. இதனால் கார் ஒன்றின் பின்பகுதியில் கன்றுக்குட்டியை தூக்கி வைத்து பொன்னான்குடியில் இருந்து கண்டரமாணிக்கத்திற்கு புறப்பட்டுள்ளனர். இதைப்பார்த்த அந்த பசுவோ தனது கன்றுக்குட்டியை வேறு எங்கேயோ தூக்கி செல்கின்றனர் என கருதி அந்த காரின் பின்னால் ஓட தொடங்கியுள்ளது.
ஆச்சரியம் அடைந்த மக்கள்:
சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை அந்த பசு கன்றுக்குட்டி சென்ற காரின் பின்னால் ஓடியுள்ளது. கடைசியில் அந்த கார் தன் எஜமானர் வீட்டிலேயே நின்றது. இவ்வளவு தூரம் ஓடிவந்த அந்த பசுவை எல்லோரும் கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.
அதன் பின் கன்றுக்குட்டியை காரில் இருந்து இறக்கியதும் தாய்ப்பாசத்துடன் அரவணைத்தது. தாய்ப்பாசத்துக்கு இணை எதுவுமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்