'சிகிச்சை' கிடைக்கும் என 'நம்பி வந்த' முதியவர்... 'வாயில் நுரை தள்ளி உயிரிழந்த சோகம்...' '4 மணி நேரம்' உடல் எடுக்கப்படாமல் 'கிடந்த அவலம்...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து யாரும் கவனிக்காததால் வளாகத்திலேயே உயிரிழந்த முதியவரின் சடலம் 4 மணி நேரமாக எடுக்கப்படாமல் கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நுழைவு வாயில் அருகே, இன்று காலை முதல் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் அமர்ந்திருந்துள்ளார். உடல்நலம் குன்றியிருந்த அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அவரை யாரும் கண்டுகொள்ளாத நிலையில், மதியம் சுமார் 1 மணியளவில் வாயில் நுரை பொங்கி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் முதியவரை மீட்கவோ, அவருக்கு சிகிச்சை அளிக்கவோ யாரும் முன்வரவில்லை.
இதனை கண்ட பொதுமக்கள் பலரும் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் முதியவர் அருகில் செல்ல யாரும் முயலவில்லை.
பின்னர் 4 மணி நேரம் கழித்து மருத்துவர் ஒருவர் அவரை சோதனை செய்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. அதன் பிறகும் முதியவரின் உடலை எடுக்காமல் மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியம் செய்து வந்துள்ளனர். தொடர்ந்து பொதுமக்களும் அங்கு வந்து செல்ல அச்சமடைந்த நிலையில் 4 மணி நேரத்திற்கு பிறகு முதியவரின் உடலை பரிசோதனைக்கு எடுத்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என சமூக வலைதளம் வாயிலாக தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்