'மரத்துல ஏறுறப்போ ஒண்ணுமே தெரியல சார்...' 'ஆனா உச்சிக்கு போனப்போ...' - போலீசாரிடம் கூறிய பதில் தான் அல்டிமேட்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தஞ்சாவூர் அருகேயுள்ள கரந்தை, சருக்கைப் பகுதியைச் சேர்ந்த 40 வயதான லோகநாதன் என்பவர் தென்னைமரத்தில் தேங்காய் பறித்துக் கொடுப்பதுடன், மரத்திலுள்ள தேவையற்ற களைகளை எடுத்துக் கொடுக்கும் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று கரந்தை ஜெயின மூப்பதெரு பகுதியில் தமிழரசன் என்பவரது பராமரிப்பிலுள்ள தென்னை மரங்களில் தேங்காய் பறித்துக் கொடுக்க சென்றுள்ளார்.

'மரத்துல ஏறுறப்போ ஒண்ணுமே தெரியல சார்...' 'ஆனா உச்சிக்கு போனப்போ...' - போலீசாரிடம் கூறிய பதில் தான் அல்டிமேட்...!

அங்கிருந்த மரங்களில் எல்லாம் ஏறிய லோகநாதன் தேங்காயையும், மரத்தின் களைகளையும் கீழே பிரித்து போட்டுள்ளார். அடுத்து சுமார் 55 அடி உயரம் கொண்ட தென்னை மரத்தில் ஏறினார். ஆனால், தேங்காய்களைப் பறித்துக் கீழே போடவில்லை. நீண்ட நேரமாகியும் அவரிடமிருந்து எந்தச் சத்தமும் இல்லை; அவர் கீழேயும் இறங்கி வரவில்லை. மர உச்சிக்கு ஏறிச் சென்றவருக்கு என்னவானது எனத் தெரியாமல் அருகிலிருந்தவர்கள் பதற்றமடைந்தனர்.

நீண்ட நேரம் ஆகியும் லோகநாதன் எந்தவித சத்தத்தையும் ஏற்படுத்தவில்லை. கிட்டத்தட்ட உட்கார்ந்துகொண்டே படுத்திருப்பது போலவே இருந்துள்ளார். கீழே இருந்தவர்களுக்கு லோகநாதன் மரத்திலேயே தூங்குகிறாரா அல்லது அவருக்கு வேறு ஏதேனும் பிரச்னையாக இருக்குமா எனத் தெரியாமல் அங்கிருந்தவர்கள் குழப்பமடைந்தனர்.

அதையடுத்து தஞ்சை மேற்கு காவல் நிலைய போலீசாருக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அப்போது தீயணைப்பு வீரர்கள் மரத்தில் ஏணி போட்டு ஏறி பார்த்தத்தில் லோகநாதன் ஜம்மென்று தூங்கிக்கொண்டிருந்துள்ளார்.

தீயணைப்பு வீரர்களால் கண்விழித்த லோகநாதன் என்னவென்று தெரியாமல் திருத்திருவென முழித்துள்ளார். அப்போதுதான் அவர் போதையில் இருப்பதும் தெரியவந்தது. பின்னர் தீயணைப்பு வீரர் ஏணி வழியாகக் கீழே இறங்கி வருமாறு அவரிடம் கூறினார். ஆனால் கொஞ்சம் போதை தெளிந்த லோகநாதன், நடிகர் வடிவேலு பாணியில், `சார், நான் மரத்தின் வழியாகவே கீழே இறங்கி வருகிறேன். நீங்க ஏணியில் இறங்கி வாங்க’ எனக் கூறிவிட்டு இறங்கத் தொடங்கினார். தீயணைப்பு வீரர்கள் கீழே இறங்குவதற்குள் மரத்தின் வழியாக சர சரவென்று லோகநாதன் கீழே இறங்கிவிட்டார். ஏராளமான பொதுமக்களும் தீயணைப்பு வீரர்கள் இருந்ததை பார்த்த அவர் சிரித்துக்கொண்டே வந்தார்.

இதுகுறித்த விசாரணையில், லோகநாதன் போலீசாரிடம், 'நான் கொஞ்சம் குடிச்சிருந்தேன். மரத்துல ஏறும்போது போதை தெரியவிலை. மரத்தின் உச்சிக்குச் சென்றதும் போதை தலைக்கேறிவிட்டது. அதனால் கொஞ்சம் அசந்து அப்படியே சாய்ந்து தூங்கிட்டேன் வேற ஒண்ணும் பிரச்னை இல்லை சார்' என வடிவேலுவைப்போல் அசால்டாகக் கூற போலீசார் உட்பட அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டனர். பின்னர் போலீசார், லோகநாதனை அழைத்துச் சென்றதுடன், 'இனி இதுபோல் நடந்து கொள்ள மாட்டேன்' என எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மற்ற செய்திகள்