‘இனி சென்னை மக்கள் காய்கறி இங்கே போய்தான் வாங்கணும்’.. தற்காலிகமாக இடம் மாறும் கோயம்பேடு மார்கெட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோயம்பேடு மார்கெட்டுக்கு சென்று வந்த பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து கோயம்பேடு மார்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதுவரை 3,023 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் இதுவரை 1724 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில தினங்களாக கோயம்பேடு மார்கெட்டுடன் தொடர்புடைய பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வந்ததை அடுத்து, கோயம்பேடு மார்கெட் மூடப்பட்டது.
இந்த நிலையில் சென்னையை அடுத்த திருமழிசையில் உள்ள குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான பகுதியில் தற்காலிக கோயம்பேடு காய்கறி சந்தை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 100 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த பகுதியில் முதற்கட்டமாக 100 கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் இருக்கும் முட்புதர்களை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றி நிலங்கள் சமப்படுத்தப்படுகிறது.
மேலும் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் ஒவ்வொரு கடையும் 200 சதுர அடியில் அமைக்கப்படுகிறது. ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் இடையே 5 அடி இடைவெளி விடப்படுகிறது. வரும் 7ம் தேதி காலையில் இருந்து தற்காலிக கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை இங்கே செயல்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.