‘காருடன் குளத்தில் மூழ்கிய தாத்தா, பேத்தி’.. ‘மின்னல் வேகத்தில் செயல்பட்ட டெம்போ டிரைவர்’.. குவியும் பாரட்டுக்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆரல்வாய்மொழி அருகே காருடன் குளத்துக்குள் மூழ்கிய தாத்தா மற்றும் பேத்தியை காப்பாற்றிய டெம்போ டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் தனது இரண்டு வயது பேத்தி பிரதிப் ஷாவுடன் காரில் சென்றுள்ளார். பிரதிப் ஷா காரின் முன் இருக்கையில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கார் ஓட்டி வந்த தாத்தா பாக்கியராஜின் மீது பிரதிப் ஷா விழுந்துள்ளார். இதனால் நிலைதடுமாறி தாறுமாறாக சென்ற கார் அருகில் உள்ள குளத்தில் விழுந்துள்ளது.
அப்போது அந்த வழியாக மணிகண்டன் என்பவர் டெம்போவை ஓட்டிக்கொண்டு வந்துள்ளார். குளத்தில் பேத்தியை கையில் ஏந்தியபடி பாக்கியராஜ் கூச்சலிட்டுள்ளார். இதனைப் பார்த்த டெம்போ டிரைவர் மணிகண்டன் மின்னல் வேகத்தில் குளத்தில் குதித்து முதலில் குழந்தையை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளார். பின்னர் பாக்கியராஜை மீட்டுள்ளார். இதனிடையே கார் குளத்துக்குள் மூழ்கியுள்ளது.
தகவலிறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அப்பகுதி இளைஞர்களின் உதவியுடன் காரை தேடியுள்ளனர். ஆனால் கார் இருக்கும் இடம் தெரியவில்லை. பின்னர் பொக்லைன் இயந்திரம் வரை வழைக்கப்பட்டு கார் மீட்கப்பட்டுள்ளது. கனநேரத்தில் குளத்தில் குதித்து தாத்தா, பேத்தியை மீட்டது குறித்து தெரிவித்த டெம்போ டிரைவர் மணிகண்டன், ‘நான் மாடுகளை ஏற்றிக்கொண்டு டெம்போவில் வந்துகொண்டு இருந்தேன். எனக்கு முன்னால் சென்ற கார் திடீரென குளத்தில் விழுந்தது. நான் டெம்போவை நிறுத்திவிட்டு கூச்சலிட்டபடி ஓடி வந்தேன். அப்போது காரில் இருந்து குழந்தையை கையில் தூக்கிய படி ஒருவர் அலறினார். அதைப் பார்த்ததும் எதை பற்றியும் யோசிக்காமல் உடனே குளத்துக்குள் குதித்தேன். குழந்தையை எப்படியாவது காப்பற்ற வேண்டும் என்பது மட்டும் எனக்குள் இருந்தது’ என தெரிவித்துள்ளார். இந்நிலையில் டெம்போ டிரைவர் மணிகண்டனுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.