'எங்க வந்து இதெல்லாம்?'.. போலீஸ் ஸ்டேஷனில் டிக்டாக் வீடியோ.. இளைஞர்கள் பெற்ற தண்டனை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆதி, வினோ, மதன்குமார். இவர்கள் காவல் நிலைய வாசலில் வைத்து டிக்டாக் வீடியோவை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களின் ஊரில் நடந்த கோஷ்டி மோதலில் கைது செய்யப்பட்ட இந்த மூவருக்கும் 15 நாள்கள் அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குச் சென்று தினமும் கையெழுத்துப் போடவேண்டும் என்கிற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதன்படி தினமும் அதியமான் கோட்டைக்குச் சென்று கையெழுத்திட்டு வரும் இந்த 3 பேரும் வழக்கம் போல் கையெழுத்துப் போடச் சென்றுள்ளனர்.
ஆனால் இம்முறை கெயெழுத்துப் போட்டுவிட்டு, காவல் நிலையத்தின் வாசலிலேயே வைத்து, ‘யாரா இருந்தாலும், எவனா இருந்தாலும் எங்களுக்கு என்ன பயமா?’ என்ற பாடல் வரிகள் வருமாறு டிக்டாக் வீடியோ செய்து வெளியிட்டதாகவும், இந்த வீடியோவைப் பார்த்த பலரும், இவர்கள் 3 பேரும் காவல் நிலையத்தை இழிவுபடுத்துவதாக உணருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை விசாரித்த அதியமான் கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ்குமார், இந்த இளைஞர்கள் மூன்று பேரின் செயலுக்காகவும், இவர்களுக்கு தக்க தண்டனை அளிக்க எண்ணி, மூவரின் மீதும் வழக்குப் பதிவு செய்து, மீண்டும் சிறைக்கு அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.