‘44 நாட்கள் கழித்து திறந்தும்’... ‘இந்த ஊர் பக்கம் மட்டும்’... ‘வெறிச்சோடி கிடந்த டாஸ்மாக் கடைகள்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள பல டாஸ்மாக் கடைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே நபர்கள் வந்துள்ளனர்.
சுமார் 44 நாட்களுக்குப்பிறகு கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் சென்னையை தவிர்த்து தமிழகம் முழுவதிலும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 73 டாஸ்மாஸ்க் கடைகள் இன்று காலை திறக்கப்பட்டன.
நீண்ட நாளைக்கு பின்னர் கடைகள் திறக்கப்படுவதால் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டம் வெகு குறைவாக காணப்பட்டது. சில கடைகளில் மட்டுமே 10-க்கு மேற்பட்டவர்கள் வரிசையில் நின்றனர். பல கடைகளில் 3 அல்லது 5 பேர் என மிக குறைந்த எண்ணிக்கையில் தான் இருந்தனர்.
சுமார் 40 நாட்களுக்கு மேல் சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தினால் போதிய வருமானம் இல்லாததால், மதுபிரியர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டதாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். சில கடைகளில் ஆதார் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே மது பானங்கள் வழங்கப்பட்டன. மற்ற இடங்ளில் எல்லாம் கூட்டம் குவிந்து காணப்பட்ட நிலையில், கோவில்பட்டி பகுதிகளில் மட்டும கூட்டம் குறைந்தே காணப்பட்டது. இதற்கிடையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து, சமூக ஆர்வலர்கள் கோவில்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.