'கடைய எப்ப சார் திறப்பீங்க?' பாணியில்... அழிச்சாட்டியம் செய்யும் மதுப்பிரியர்கள்!... செக் வைத்த அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் திருட்டை தடுக்கும் விதமாக, டாஸ்மாக் கடைகளில் இருக்கும் மது பாட்டில்களை இடமாற்றம் செய்ய நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழகத்தில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பல்வேறு இடங்களில் அரசு மதுபானக் கடைகளை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடப்பட்டன. இதன் காரணமாக, அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க, மதுபாட்டில்களை பாதுகாத்து வைக்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் மதுக்கடைகளில் இருந்த மதுபாட்டில்கள் அருகில் உள்ள திருமண மண்டபம், குடோன்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 25க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளில் உள்ள மதுபாட்டில்கள், வருவாய்த் துறை மற்றும் காவல்துறை உதவியோடு பழனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இதே போல், கொடைக்கானல் பகுதியில், 9 அரசு மதுபானக் கடைகளிலுள்ள சுமார் ரூ.2 கோடி மதுப்பாட்டில்களை லாரி மூலம் நாயுடுபுரம் பகுதியிலுள்ள தனியார் தங்கும் விடுதிக்குக் கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்தனர். ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டு கடைகள் திறக்கப்பட்டதும் மீண்டும் அவை கடைகளுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வத்தலக்குண்டு பகுதியில் 7 டாஸ்மாக் கடைகள், நிலக்கோட்டை பகுதியில் 3 டாஸ்மாக் கடைகள், கொடை ரோடு பகுதியில் ஒரு கடை உள்ளது. இங்கு வைக்கப்பட்டு இருந்த மது பாட்டில்கள் வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.