அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி.. 10 மணிநேரம் நடந்த ஆபரேஷன்.. முதல்வரிடமிருந்து வந்த போன்காலால் நெகிழ்ந்துபோன தாய்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமிக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் போன் மூலம் சிறுமியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்திருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஸ்ரீ வாரி பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்டீபன் ராஜ் - சௌபாக்கியா தம்பதியர். இவர்களுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களது மூத்த மகள் டானியாவுக்கு அரியவகை முக சிதைவு நோய் ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இதுபற்றி ஏதும் அறியாத பெற்றோர் மருத்துமனைக்கு தங்களது மகளை அழைத்துச் சென்று வந்திருக்கிறார்கள். ஆறு ஆண்டுகள் கழித்தே அவருக்கு பேரி ராம்பெர்க் ஹெமி பேசியல் அட்ராப்பி (Parry Romberg Syndrome Hemifacial atrophy) என்னும் அரியவகை முக சிதைவு நோய் இருப்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
உதவி
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தங்களது மகளின் அறுவை சிகிச்சைக்கு உதவும்படி சிறுமியின் பெற்றோர் முதல்வருக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்த செய்தி பலரது மனங்களையும் கலங்க செய்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழு சிறுமியின் வீட்டுக்கு நேரடியாக சென்றனர். சிறுமியின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகள் பற்றியும் அறிந்துகொண்டனர்.
இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறுமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன் சிறுமிக்கு சென்னையில் அறுவை சிகிச்சை நடைபெறும் என உறுதியளித்திருந்தார். இந்நிலையில், தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் சிறுமிக்கு இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஜெர்மன் மருத்துவர்கள் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் இந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்றனர். 10 மணிநேரம் நீடித்த இந்த ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடிந்தது.
முதல்வரிடமிருந்து வந்த போன்கால்
அறுவை சிகிச்சை முடிந்து அவசர சிகிச்சை பிரிவிலிருந்து வெளியே வந்த சிறுமி டான்யாவையும் பெற்றோர்களையும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் நேரில் சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து, தமிழக முதல்வர் சிறுமியின் தாயிடம் போனில் பேசினார். சிறுமியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த முதல்வர் விரைவில் நேரில்வந்து பார்ப்பதாகவும் சிறுமி குணமடைய தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் தமிழக அரசே மேற்கொள்ளும் எனவும் உறுதியளித்திருக்கிறார். இதனால் நெகிழ்ந்துபோன சிறுமியின் தாய் சௌபாக்கியா முதல்வருக்கு கலங்கிய கண்களுடன் நன்றி தெரிவித்திருக்கிறார்.
மற்ற செய்திகள்