'அரசு' பள்ளி 'கழிவறையில்' அடுத்த 'சோகம்'.. கதவைத் திறந்தும் மாணவனின் கையைக் கடித்த 'பாம்பு'..
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன், பள்ளிக்கூடம் ஒன்றின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான சம்பவம், தமிழகம் முழுவதும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
!['அரசு' பள்ளி 'கழிவறையில்' அடுத்த 'சோகம்'.. கதவைத் திறந்தும் மாணவனின் கையைக் கடித்த 'பாம்பு'.. 'அரசு' பள்ளி 'கழிவறையில்' அடுத்த 'சோகம்'.. கதவைத் திறந்தும் மாணவனின் கையைக் கடித்த 'பாம்பு'..](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/tamilnadu-snake-bites-student-hand-in-govt-school-toilet-thum.jpg)
கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த பள்ளியில், கட்டிடங்கள் பாதுகாப்பான நிலையில் இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில், பள்ளிக் கழிவறைச் சுவரும் இடிந்து விழுந்து மாணவர்கள் பலியானதால், பள்ளியின் நிர்வாகத்தினருக்கு எதிராக மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள், ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து விசாரித்த அதிகாரிகள், சம்மந்தப்பட்ட நபர்களின் மீது நடவடிக்கை எடுத்து, வழக்குப் பதிவும் செய்தனர்.
அது மட்டுமில்லாமல், தமிழகத்தில் இது போன்று தரமற்று இருக்கும் அனைத்து பள்ளிக்கூடத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சீரமைக்கப்படும் என்றும் அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது அதே போன்று ஒரு சம்பவம், திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பிச்சம்பட்டி ஊராட்சி அருகே நிகழ்ந்துள்ளது. அப்பகுதியிலுள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 11 வயது சிறுவன் ஒருவன் கழிவறை செல்வதற்காக அதன் கதவைத் திறந்துள்ளான்.
அப்போது எதிர்பாராத விதமாக, அந்த சமயத்தில் அவனது கையில் பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து, பாம்பு கடிக்கு ஆளான சிறுவனை அருகிலுள்ள மருத்துவமனையில் ஊர் மக்கள் சேர்த்துள்ளனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அந்த பள்ளியின் கழிவறை அருகே புதர் மண்டிக் கிடப்பதாலும், அது மட்டுமில்லாமல் அங்கு சுற்றுச் சுவர் இல்லாததும் தான் இந்த விபத்துக்கு காரணம் என ஊர் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளையும் சோதித்து உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்தால் மட்டும் தான் மாணவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக இருக்கும். இதனால், வெகு விரைவில் அதனை மேற்கொள்ள அரசுக்கு பொது மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்