கேரளாவில் கொள்ளை.. தப்பிக்கலாம்னு திருடர்கள் போட்ட பலே பிளான்.. கடைசில மண்டை மேல இருந்த கொண்டையை மறந்த கதையா ஆகிடுச்சு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கேரளாவில் கொள்ளையடித்து விட்டு தப்பிக்க நினைத்த இரண்டு திருடர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

கேரளாவில் கொள்ளை.. தப்பிக்கலாம்னு திருடர்கள் போட்ட பலே பிளான்.. கடைசில மண்டை மேல இருந்த கொண்டையை மறந்த கதையா ஆகிடுச்சு..!

கேரள மாநிலம், கொல்லம் பகுதியில் இருக்கிறது சாத்தனூர். இந்த கிராமத்தில் சில தினங்களுக்கு முன்னர் ஒரு வீட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றிருக்கிறது. தங்கம் மற்றும் பணத்துடன் கொள்ளையர்கள் தப்பிச்சென்றிருக்கின்றனர். இதனையடுத்து இதுகுறித்து சாத்தனூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி விசாரணையில் இறங்கிய போலீசார், கொள்ளை நடந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் வந்ததும், அதனை அங்கேயே விட்டுவிட்டு கொள்ளையடித்த பொருட்களுடன் தமிழகம் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் ஏறியதும் தெரியவந்திருக்கிறது. மேலும், கொள்ளையர்கள் பயன்டுத்திய இருசக்கர வாகனம் திருடப்பட்டது என்பதும் தெரியவந்திருக்கிறது.

TamilNadu Police arrested Thieves who stole jewels in Kerala

இதனைத்தொடர்ந்து, கேரள போலீசார், தமிழக காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். தொடர்ந்து, தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சஞ்சய்காந்தி மற்றும் செங்கோட்டை தனிபிரிவு காவலர் அரவிந்த் தலைமையிலான போலீசார் புளியரை சோதனை சாவடியில் பரிசோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கேரளாவில் இருந்து வந்த பேருந்தில் சாத்தனூர் போலீசார் கூறிய அடையாளங்களுடன் இருந்த இருவரை போலீசார் விசாரணை செய்திருக்கின்றனர். அப்போது, அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே, காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். அவர்களிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், சாத்தனூரில் நடைபெற்ற கொள்ளைக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

TamilNadu Police arrested Thieves who stole jewels in Kerala

இதனையடுத்து, அவர்களது உடைமையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  36.2 கிராம் மதிக்கத்தக்க தங்க நகைகள் மற்றும் 178.3 கிராம் மதிக்கத்தக்க தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகள், ரூ.1,18,350 பணம் உள்ளிட்டவைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, இதுகுறித்து சாத்தனூர் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக விரைந்து வந்த சாத்தனூர் போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட மதுரை பகுதியை சேர்ந்த சுரேஷ் மற்றும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த எட்வின்ராஜ் ஆகிய இருவரையும் கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடிக்க உதவிய தமிழக காவல்துறைக்கு கேரள போலீசார் நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

கொள்ளையடித்துவிட்டு போலீசில் சிக்காமல் இருக்க அரசு பேருந்தில் பயணம் செய்த கொள்ளையர்களை சிசிடிவி கேமரா மூலமாக டிராக் செய்து தமிழக போலீசார் உதவியுடன் கேரள காவல்துறையினர் பிடித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

POLICE, KERALA, THIEVES

மற்ற செய்திகள்