'எல்.கே.ஜி' முதல் 'ஐந்தாம்' வகுப்பு வரை ஸ்கூல் லீவ் .. 'வெளி மாநிலங்களுக்கு போகாதீங்க' ... தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கை
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக மக்கள் தேவையின்றி வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், முன்னெச்சரிக்கையாக பள்ளிகள் மற்றும் திரையரங்குகள் மற்றும் மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடைகளை விதித்து வருகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் இது குறித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 'கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் வெளி மாநிலங்களுக்கு தேவையின்றி செல்ல வேண்டாம். அதே போல முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் ஆகியோர் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பதினைந்து நாட்களுக்கு கூட வேண்டாம்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், 'எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழகத்தின் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எல்லையோர பகுதியிலுள்ள மாவட்டங்களில் திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களை மார்ச் 31 வரை மூட வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழிபாடு தளங்களில் சுகாதாரத்தை மேற்கொள்ளவேண்டும். அதே போல மக்கள் அடிக்கடி தங்களது கைகளை சோப்பு பயன்படுத்தி சுத்தமாக கழுவ வேண்டும்' எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் சுமார் 100 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.