'கடைசி' காலம் வர நான் பாத்துக்குறேன்... கடல் தாண்டி வந்த 'அழைப்பால்' நெகிழ்ந்து போன மூதாட்டி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கரூர் மாவட்டம் புகளூர் ஒன்றியத்தை சேர்ந்தவர் காமாட்சி பாட்டி. இவருக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள். காமாட்சி பாட்டியின் கணவர் 25 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட, பிள்ளைகளும் கைவிட்டனர்.

'கடைசி' காலம் வர நான் பாத்துக்குறேன்... கடல் தாண்டி வந்த 'அழைப்பால்' நெகிழ்ந்து போன மூதாட்டி!

இதனால் பழைய ஓலைக் குடிசை ஒன்றில் அவர் வாழ்ந்து வந்துள்ளார். வயிற்றுப் பிழைப்பிற்காக தள்ளாத முதுமையிலும், வாழைப்பழங்களை ஊர் ஊராக நடந்தே சென்று விற்பனை செய்து வந்துள்ளார். காமாட்சி பாட்டியின் வாழ்க்கை குறித்து நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாக பலர் அந்த பாட்டிக்கு உதவ முன் வந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் மென்பொருள் பணியாளராக பணியாற்றி வரும் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட பெண் ஒருவர் காமாட்சி பாட்டியை குறித்து அறிந்ததும் மனமுடைந்து அவருக்கு உதவி செய்ய முன் வந்துள்ளார். சிலரின் உதவியுடன் காமாட்சியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். 'பெத்த பசங்களே என்ன ஒதுக்கிட்டாங்க. ஆனா எங்கேயோ இருக்குற நீ, எனக்கு உதவி பண்றே. நீ நல்லா இருக்கணும்' என காமாட்சி பாட்டி தெரிவித்துள்ளார்.

பதிலுக்கு அந்த பெண்ணும், 'என்னை உங்களின் மகளாக நினைத்து கொள்ளுங்கள். காலம் முழுவதும் உங்களுக்கு உதவி செய்வேன். இனிமேல் வாழைப்பழம் விற்க போவதை குறைத்துக் கொள்ளுங்கள்' என கூறியுள்ளார். மேலும், அந்த பாட்டிக்கு மாதந்தோறும் பணம் அனுப்பி உதவி செய்வதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். பெற்ற பிள்ளைகளை ஒதுக்கி வைத்த நிலையில் ஏழு கடல் தாண்டி வந்த அளவு கடந்த அன்பால் காமாட்சி பாட்டி ஆனந்த கண்ணீரில் நெகிழ்ந்து போயுள்ளார்.