200 வருடங்களில் 4 முறை மட்டுமே.. சென்னையில் 1000 மி.மீ மழை.. வெதர்மேன் கொடுத்த எச்சரிக்கை
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: நவம்பர் மாதத்திற்கு 1000 மி.மீ.யை கடக்க சென்னைக்கு மேலும், வெறும் 70 மி.மீ அதிகம் மழைதான் தேவை. 200 வருடங்களில் 4 முறை மட்டுமே நவம்பர் மாதம் இதுபோல 1000 மி.மீ மழையை சென்னை நவம்பரில் கடந்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை இயல்பை விட அதிக மழை பொழிவை கொடுத்துள்ளது. சென்னையில் இயல்பைவிட 70 சதவீதம் கூடுதலாக வடகிழக்கு பருவ மழை கொட்டி உள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்கடாக காட்சி அளித்து வருகின்றன. தெளிய தெளிய அடிப்பது போல், மழை நீர் சாலைகளில் வற்றுவதற்குள் அடுத்த மழை பெய்து விடுகிறது.
சென்னையின் சுரங்கப்பாதைகள் குளங்கள் என பட்டா போடாத குறை தான், அந்த அளவிற்கு மழை நீர் ஆக்கிரமித்து கொண்டுள்ளது. சென்டர்மீடியன்கள் மற்றும் சாலைகளின் தவறான வடிவமைப்பு காரணமாக சாலையின் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் பள்ளத்தை நோக்கி நகர வேண்டிய வெள்ள நீர், மறுபக்கம் போக வழியில்லாமல் சாலைகள் குளம் போல் மாறி கிடக்கின்றன. சென்னையில் மட்டுமே இந்த நிலை என்று இல்லை. கனமழையால் தென் மாவட்டங்களும் வெள்ள நீரில் தத்தளிக்கின்றன. இந்நிலையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் சென்னை, திருவள்ளூர் மற்றும் கடலோர மாவட்டங்கள் என மொத்தம் 12 மாவட்டங்களுக்கும் ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் நேற்றிரவு வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது : டெல்டாவில் இருந்து மெதுவாக நகர்ந்த மேகங்கள் நிறைய சோதனை மற்றும் அலுப்பான பயணத்திற்குப் பிறகு சென்னையை அடைந்திருக்கின்றன. சென்னை மாநகரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இரவு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நிலையங்கள் நாளை காலை 100 மிமீ அளவைத் தாண்டிவிடும்.
நான் பகிர்ந்துள்ள (நான்கு) படங்கள், தாழ்வான இடத்தில் இருந்து கடிகார திசையில் சுற்றும் மேகங்களை சென்னைக்கு தள்ளுகிறது.கடலூர், காரைக்கால், விழுப்புரம் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூருக்கான நேரம். நவம்பர் மாதத்திற்கு 1000 மி.மீ.யை கடக்க சென்னைக்கு மேலும், வெறும் 70 மி.மீ அதிகம் மழைதான் தேவை. 200 வருடங்களில் 4 முறை மட்டுமே நவம்பர் மாதம் இதுபோல 1000 மி.மீ மழையை சென்னை நவம்பரில் கடந்துள்ளது. இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தனது பதிவில் கூறியிருந்தார்.
வெதர்மேன் கூறியபடி 70 மில்லி மீட்டர் மழை அளவை சென்னை நேற்று இரவு தாண்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நவம்பர் மாதத்தில் 1,000 மில்லி மீட்டர் என்ற சாதனை அளவை சென்னை நகரம் படைத்திருக்க வாய்ப்பு உள்ளது. விரைவில் அறிவிப்பு வரலாம்.
மற்ற செய்திகள்