தமிழ்நாடு முழுவதும் 1.60 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி!.. தயார் நிலையில் சுகாதாரத்துறை!.. யாருக்கு?.. எங்கே?.. எப்போது?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில், ஒரு கோடியே 60 லட்சம் பேருக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான, ஒத்திகை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் தடுப்பூசி போடுவதற்கான பயிற்சிகளும், அவற்றை பாதுகாப்பதற்கான நடைமுறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில், ஒரு கோடியே 60 லட்சம் பேருக்கு, பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்களில் முதற்கட்டமாக, 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறை, இராணுவம், வருவாய் துறையினர், செய்தி துறையை சேர்ந்தவர்களுக்கு 2ஆம் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. மூன்றாம் கட்டமாக 50 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு, இருதயம், சிறுநீரக பாதிப்புடைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, தமிழ்நாடு முழுவதும், அரசு மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 2880 மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.
தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பத்தில் பாதுகாக்க குளிர்சாதன வசதியுடன் கூடிய 2685 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசியை பாதுகாப்பாக வைக்க, 5 ஆயிரத்து 448 குளிர்சாதன எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. தடுப்பூசி போடும் பணிக்காக தமிழகம் முழுவதும் 21 ஆயிரத்து 170 செவிலியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
மற்ற செய்திகள்