குடியரசு தின விழா.. மத்திய அரசு நிராகரித்த தமிழக அலங்கார ஊர்தி.. தமிழக முதல்வர் எடுத்த அசத்தல் முடிவு
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை : புதுடெல்லியில் வைத்து நடைபெறும் குடியரசு தின விழாவில், தமிழக அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இது பற்றி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில், குடியரசு தின விழாவை முன்னிட்டு, பிரம்மாண்ட அணிவகுப்பு ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிகழ்ச்சியில், அனைத்து மாநிலங்களின் சார்பில், கலை பண்பாடு பற்றிய அலங்கார ஊர்திகள் இடம்பெறும். அதன் படி, இந்த ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தின நிகழ்வில், தமிழக அலங்கார ஊர்திகள் பங்கேற்க அனுமதியில்லை என மத்திய அரசு தெரிவித்தது.
நிராகரிப்பு
தமிழக அரசின் சார்பில், வேலு நாச்சியார், வ.உ.சி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை சித்தரிக்கும் அலங்கார ஊர்திகளின் கருத்துரு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இதனை, அலங்கார ஊர்திகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு நிராகரித்துள்ளது.
அனுமதி இல்லை
இது தொடர்பாக , மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது. தென் மாநிலங்களில், கர்நாடகாவைத் தவிர மற்ற எந்த மாநிலங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
இந்நிலையில், டெல்லி குடியரசு தின விழாவில், தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, சென்னையில் வைத்து நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்ட ஊர்வலத்தில், அவற்றிற்கு அனுமதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வரவேற்பு
அது மட்டுமில்லாமல், தமிழகத்தின் முக்கியமான நகரங்களுக்கும், மக்களின் பார்வைக்காக அந்த அலங்கார ஊர்திகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வரின் இந்த முடிவு, தமிழக மக்களிடையே அதிகம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
மற்ற செய்திகள்