“ரஜினி சாரை அப்படி கவுண்ட்டர் அடிக்க யாராலும் முடியாது.! கவுண்டமணி தான் வேணும்னு முடிவா இருந்தாரு” - சுரேஷ் கிருஷ்ணா EXCLUSIVE
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த 2002-இல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா உள்ளிட்ட ரஜின்காந்த்தின் தொடர் வெற்றிப்படங்களை அடுத்து நான்காவது முறையாக பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.
கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணிபுரிந்தனர்.
மகா அவதாரமான பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி அடிக்கடி காட்டும் அந்த பாபா முத்திரை, படம் வெளியான சமயத்தில் பிரபலமானது. இந்த நிலையில் தற்போது இந்தப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் DI, மிக்ஸிங் போன்ற தொழில்நுட்ப மாற்றங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த பாபா பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, “பாபா பட சமயத்தில் நாம் பண்ணிய மெனக்கெடலுக்கு அப்போதைய ரெஸ்பான்ஸ் அந்த படத்தில் இருந்த விஷயங்களுக்கு குறைவுதான்.
இப்போதும் சிறியோர் முதல் பெரியோர் வரை, இன்றைய 2 கே கிட்ஸ் வரை ரஜினி சாரை லவ் பண்ணுகிறார்கள். ரஜினி சாரின் ஸ்டைல் அனைத்தையும் சின்ன மொபைலில் கணினியில் காண்பதை விட, தியேட்டரில் பார்ப்பதே குதூகலம். எனவே படம் மீண்டும் தியேட்டரில் வெளியானால் இன்னும் ரெஸ்பான்ஸ் இருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து ரஜினி - கவுண்டமணியின் நீண்ட வருடங்களுக்கு பிறகான காம்போ குறித்து கேட்கப்பட்டபோது பேசிய இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, “ரஜினி சாருக்கும் கவுண்டமணி சாருக்கும் பெரிய புரிதல் இருந்தது. இந்த கதை உருவானதுமே ரஜினி சார் இதற்கு கவுண்டமணி தான் என முடிவாக கூறினார். ரஜினி சாருக்கு இணையாக பேச வேண்டும். ஒரு இளைய ஆர்டிஸ்டை அப்படி கவுண்ட்டர் அடிக்க பயன்படுத்த முடியாது.
ரஜினி சாரை அப்படி கவுண்ட்டர் அடிக்க யாராலும் முடியாது. கவுண்டமணி சார் அடிக்கும் கமெண்டுகளில் ரஜினி சாரே பல ஷாட்களில் சிரித்துக்கொண்டிருந்துப்பார்” என தெரிவித்தார்.
மற்ற செய்திகள்