முடிவுக்கு வந்த சிறைவாசம்.. நளினி உள்ளிட்ட 6 பேருக்கு விடுதலை.. உச்சநீதிமன்றம் உத்தரவு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் நளினி உள்ளிட்ட 6 பேரின் விடுதலை வழக்கில் அனைவருக்கும் விடுதலை அளித்து உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.

முடிவுக்கு வந்த சிறைவாசம்.. நளினி உள்ளிட்ட 6 பேருக்கு விடுதலை.. உச்சநீதிமன்றம் உத்தரவு..!

Also Read | இந்தியாவை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து.. பாகிஸ்தான் பிரதமர் போட்ட பரபர ட்வீட்.. T20WC2022

முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 தமிழருக்கு 1998-ம் ஆண்டு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் உச்சபட்ச தண்டனை விதித்தது. பின்னர் மேல்முறையீடு வழக்கில் சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளனுக்கு மட்டும் உச்சபட்ச தண்டனை உறுதியானது.

இதனை தொடர்ந்து, 2000 ஆம் ஆண்டில் நளினிக்கும், 2014 ஆம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கும் உச்சபட்ச தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதனிடையே தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் பேரறிவாளன்.

மேலும் முந்தைய வருடங்களில் உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடுத்த வழக்கில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசும் ஏழு தமிழர்களை விடுதலை செய்வதில் தனது உறுதிப்பாட்டைத் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில் கடந்த மே.18ம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி விடுதலை செய்து உத்தரவிட்டது. 

supreme court ordered to release Nalini and 6 others

இந்நிலையில், தங்களையும் அதேபோன்று விடுதலை செய்யவேண்டும் என நளினி உள்ளிட்ட 6 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதுக்குறித்து தமிழக மற்றும் மத்திய அரசு பதில் அளிக்குமாறு கடந்த மாதம் 26 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தனர். அப்போது இந்த வழக்கில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கலாம் என மு.க.ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனிடையே கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையில் வழக்கு 11 ஆம் தேதி (இன்று) விசாரணை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா கொண்ட அமர்வு, வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஏற்கெனவே, அ.ஞா. பேரறிவாளனுக்கு முன் விடுதலை அளித்து, 18.05.2022 அன்று அளித்த தீர்ப்பைப் பின்பற்றி இத்தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது.

கடந்த 2018 செப்டம்பர் 9ஆம் நாள், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வது எனத் தீர்மானித்து, அதனடிப்படையில் ஒவ்வொருவருக்கும் தனித்தனிக் கோப்புகளாக 2018 செப்டம்பர் 11 அன்று, ஆளுநருக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | சவுக்கு சங்கரின் சிறைத்தண்டனைக்கு எதிராக போடப்பட்ட வழக்கு.. உச்சநீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு உத்தரவு..!

SUPREME COURT, NALINI AND 6 OTHERS IN RAJIV GANDHI CASE, RAJIV GANDHI ASSASSINATION CASE, ராஜிவ்காந்தி கொலை வழக்கு

மற்ற செய்திகள்