இரவு நேரத்தில், பெண் மருத்துவரின் காரை நிறுத்தி, கத்தி முனையில், அவர் அணிந்திருந்த 24 சவரன் தங்க நகைகளை, மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வரும் அஞ்சலி என்ற மருத்துவரிடம்தான், இந்த நகைப் பறிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, தனது மருத்துவமனையில் நோயாளிகளை பார்த்துவிட்டு, வழக்கம்போல், தனது வீடு உள்ள காஞ்சிபுரம், மளிகை செட்டி தெருவை நோக்கி, காரில் பின் இருக்கையில் இவர் அமர்ந்திருக்க, ஓட்டுநருடன் சென்று கொண்டிருந்தார்.
ராஜகுளம் - ஏனாத்தூர் சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர், திடீரென மருத்துவர் அஞ்சலியின் காரை நிறுத்தினர். இதனால் என்ன செய்வது என தெரியாமல் இருவரும் தவித்தநிலையில், இதனைக் கண்டுகொள்ளாமல், காரின் கண்ணாடியை உடைத்த கொள்ளையர்கள், மருத்தவரின் கழுத்தில் கத்தியை வைத்து, அவர் அணிந்திருந்த 24 சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.
மருத்துவர் அஞ்சலி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், தினமும் அவ்வழியில் மருத்துவர் செல்வதை நோட்டமிட்டே இவ்வாறு கொள்ளை நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பேக்டரியில் பணியாற்றுவோர், சென்னையிலிருந்து வரும் நபர்களிடம், இதேப்பகுதியில் அடிக்கடி தொடர் கொள்ளை நடைப்பெற்று வருவதாக, அங்கு வசிக்கும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.