28 ஆண்டுகளுக்கு பிறகு 3 மாவட்டங்களுக்கு ‘புயல்’ எச்சரிக்கை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தென் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி தென் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த காற்றழுத்த மண்டலம் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரும் 2ம் தேதி முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அணைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடலோர பகுதிகளில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த 1992ம் ஆண்டு தூத்துக்குடி அருகே புயல் கரையை கடந்தது. அப்போது பெரு வெள்ளம் ஏற்பட்டு ஏராளமான உயிரிழப்பும், பலத்த சேதமும் ஏற்பட்டது. 28 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் தென் மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனால் அதிகாரிகள் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகின்றனர். ஏற்கனவே பெய்த மழையால் தென் மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உள்ளன. இதனால் குளக்கரைகள், கால்வாய்கள் உடைப்பு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
தாமிரபரணி ஆற்றில் கடந்த மழையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதுபோல தற்போது வெள்ளம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படாதபடி தண்ணீர் கடலில் கலக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் தாமிரபரணி கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மற்ற செய்திகள்