'சிலிண்டர்' லாரி மீது 'மோதிய' வேகத்தில்... அடியில் 'சிக்கிய' கார்... முன்பகுதி 'தீப்பிடித்து' கோர விபத்து...
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஸ்ரீபெரும்புதூர் அருகே சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் கார் ஒட்டுநர் படுகாயம் அடைந்துள்ளார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த் (36) என்பவர் நேற்று காலை தனது காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு எதிரே வந்த லாரி ஒன்று சாலையின் வலது புறமாக திரும்பியபோது, வேகமாக சென்ற பிரசாந்தின் கார் கண் இமைக்கும் நேரத்தில் அதன்மீது பயங்கரமாக மோதியுள்ளது.
மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி லாரிக்கு அடியில் சிக்க, லாரி மற்றும் காரின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளன. மேலும் லாரிக்கு அடியில் காரின் முன்பகுதி சிக்கிக்கொண்டதால் பிரசாந்த் உடனடியாக தப்பிக்க முடியாமல் போக, அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து படுகாயமடைந்திருந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே லாரி மீது மோதிய காரின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்து, மளமளவென தீ லாரிக்கும் பரவியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். இதில் கார் முற்றிலும் எரிந்து நாசமாக, லாரியின் முன்பகுதி சேதம் அடைந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சிலிண்டர் லாரியில் தீ பரவாமல் அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்து நடந்த உடன் தப்பி ஓடிய லாரி ஒட்டுநரை தேடி வருகின்றனர்.