'ரம்மி விளையாடி வேலையை இழந்த ஐ.டி. ஊழியர்'... தாயுடன் சேர்ந்து 'விபரீத' முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆன்லைன் ரம்மி விளையாட்டில், லட்சக்கணக்கில் பணத்தை இழந்த ஐ.டி. ஊழியர், தனது தாயுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'ரம்மி விளையாடி வேலையை இழந்த ஐ.டி. ஊழியர்'... தாயுடன் சேர்ந்து 'விபரீத' முடிவு!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி என்.எல்.புரத்தைச் சேர்ந்தவர் அருள்வேல். இவரது மனைவி திவ்யா. இருவரும் சென்னை பெரும்பாக்கத்தில் தங்கி ஐ.டி.யில் பணிபுரிந்து வந்தனர். ஐ.டி. ஊழியரான அருள்வேல் மாதம் ஒரு லட்சம் ரூபாயும், மின் பொறியாளரான திவ்யா மாதம் 50 ஆயிரம் ரூபாயும்  சம்பளம் பெற்று வந்த நிலையில், அருள்வேல் அலுவலகத்தில் பணி நேரத்தில் ஆன்லைனில் ரம்மி சூதாட்டம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் ரம்மி சூதாட்டத்தில் ஜெயித்த அருள்வேல், கொஞ்சம் கொஞ்சமாக ஆன்லைனில் ரம்மி விளையாடி சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்ததாக கூறப்படுகிறது. விட்ட பணத்தை பிடிப்பதற்காக பண்ருட்டியில் உள்ள அரசியல் செல்வாக்குமிக்க பைனான்சியர் ஒருவரிடம் லட்சக் கணக்கில் பணம் கடனாகப் பெற்று அதனையும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பறிகொடுத்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பணியில் கவனம் இல்லாததால் அருள்வேல் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

வாங்கிய கடனை எப்படி செலுத்துவது என்று குழம்பிப் போன அருள்வேல், தனது மனைவி திவ்யா மற்றும் மூன்று வயது மகனுடன் சொந்த ஊரான பண்ருட்டிக்கு சில தினங்களுக்கு முன்பு சென்றுள்ளார். அருள்வேலின் மனைவி குழந்தையுடன், தாய் வீட்டிற்கு சென்றுவிட அருள்வேல் தனது தந்தை சிற்றரசு மற்றும் ராஜலட்சுமி ஆகியோருடன் பண்ருட்டியில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பைனான்சியர் கொடுத்த பணத்தை கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

கடன் தொகை 50 லட்சத்தை தாண்டியதால் இந்த தொகையை எப்படி கட்டுவது என்று அருள்வேலின் தாய் ராஜலட்சுமியும் தந்தை சிற்றரசும் தவித்து வந்தனர். கந்து வட்டி கும்பலின் மிரட்டலால், மனம் நொந்து போன ராஜலட்சுமியும் அருள்வேலும் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தந்தை சிற்றரசு வெளியே சென்றிருந்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காவல்துறையின் விசாரணையில், வீட்டில் இருந்து ராஜலட்சுமி கைப்பட எழுதிய தற்கொலை கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில் கடிதத்தில் மகன் ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்தது குறித்தும், கந்துவட்டி மிரட்டல் குறித்தும் ராஜலட்சுமி குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதையடுத்தே இந்த சம்பவம் தற்போது வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.

RUMMY, ONLINE, GAMBLING