'கோள்கள் இணைவதால் இந்த 'ராசி' காரர்களுக்கு ஆபத்தா'?...'அச்சத்தில் மக்கள்'...உண்மை என்ன ?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோள்கள் இணைவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என ஜோதிடர்கள் கூறியிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'கோள்கள் இணைவதால் இந்த 'ராசி' காரர்களுக்கு ஆபத்தா'?...'அச்சத்தில் மக்கள்'...உண்மை என்ன ?

சூரியன், சந்திரன், குரு, சனி, புதன், கேது ஆகிய 6 கிரகங்கள் தனுசு ராசியில் இணைந்து ராகுவின் பார்வையைப் பெறுகிறார்கள். இந்த கோள்சாரா அமைப்பு நாளை (புதன்கிழமை) தொடங்கி 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. இது 'தனுசு ராசியில்' பிறந்தவர்களுக்கு உகந்தது இல்லை எனவும், அது அவர்களுக்கு கலவரமான ஒன்றாக அமையும் எனவும் ஜோதிடர்கள் கூறியிருந்தார்கள். இது மக்களிடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மக்களிடையே நிலவும் அச்சம் குறித்து சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் சவுந்தரராஜன் தெளிவுபடுத்தியிருக்கிறார். அவர் கூறும்போது, கோள்கள், சூரியனை தங்கள் சுற்றுப்பாதையில் சுற்றி வருகின்றன. கெப்ளரின் 3-வது விதிப்படி சூரியன் மற்றும் கோள்கள் இருக்கும் தொலைவை பொறுத்து அது சூரியனை சுற்றிவரும் காலம் வேறுபடும். சில நேரம்  ஒரு கோள் மற்றொரு கோளை முந்தி செல்வதை போலவும், அருகருகே அமைந்திருப்பது போலவும் தோன்றலாம்.

ஆனால் உண்மையில் அவற்றிற்கு இடையே பல கோடி கிலோ மீட்டர் தூரம் இருப்பதால், அவை விலகியே  உள்ளன. எனவே இதுபோன்ற கோள்கள் ஒருங்கமைவது அவ்வப்போது அபூர்வமாக நிகழும். ஆனால் இது பூமியில்  எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மேலும் அதன் ஒருங்கிணைந்த ஈர்ப்பு விசை நம்மை எந்த வகையிலும் பாதிக்காது. இதனிடையே நிலவும், சூரியனும் ஒருங்கே அமைந்து இருப்பதால் ஒவ்வொரு மாதமும் அமாவாசையில் நிகழ்வது போல கடல் அலை எழுச்சி ஏற்படும்.

மற்றபடி இது பொதுமக்களுக்கு பாதிப்பையோ அல்லது குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு ஆபத்தையோ ஏற்படுத்தும் என்பதற்கு எந்தவித அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கடந்த 1962-ம் ஆண்டு பிப்ரவரி 3 முதல் 8 வரை ராகு தவிர மற்ற 8 கிரகங்கள் மகர ராசியில் ஒன்று சேர்ந்தன. அப்போது உலகம் அழியும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SOLAR ECLIPSE, SURYA GRAHAN, ZODIAC SIGNS, CHENNAI