டீ குடிக்க பைக்கில் போன ‘மெக்கானிக்’.. பாதி வழியில் வண்டியை நிறுத்தி கண்ட ‘காட்சி’.. வெலவெலத்துப்போன மக்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தென்காசி அருகே இருசக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த நல்லபாம்பு நபர் ஒருவரை கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் முப்பிடாதி. இவர் அப்பகுதியில் உள்ள ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று டீ குடிப்பதற்காக வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார். சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென முப்பிடாதி காலில் ஏதோ கடித்தது போல் இருந்துள்ளது. ஏதாவது பூச்சியாக இருக்கும் என கருதி இருசக்கர வாகனத்தை தொடர்ந்து ஓட்டியுள்ளார்.
மீண்டும் காலில் ஏதோ கடித்ததுபோல் இருக்கவும், உடனே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பார்த்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்துக்குள் பதுங்கியிருந்த நல்லபாம்பு மறுபடியும் இரு முறை அவரை கொத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே வண்டியை கீழே போட்டுவிட்டு உதவிக்கு அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார்.
முப்பிடாதியின் கூச்சல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது அவரது காலில் 4 இடங்களில் பாம்பு கடித்த தடம் இருந்துள்ளது. இதனால் அவரை மீட்டு உடனே செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இருசக்கர வாகனத்துக்குள் பதுங்கியிருந்த நல்லபாம்பை வெளியேற்ற முயற்சி மேற்கொண்டனர். ஆனால் வண்டிக்கு உள்ளே பாம்பு நுழைந்ததால் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் பல மணிநேர போராட்டத்துக்கு பின் இருசக்க வாகனத்துக்குள் இருந்த நல்லபாம்பை மீட்டு வனத்துக்குள் பத்திரமாக விட்டனர். தற்போது குளிர்காலம் என்பதால் வாகனங்களில் விஷப் பாம்புகள் பதுங்கும் வாய்ப்பு உள்ளதால், வாகனத்தை எடுக்கும் முன் முழுமையாக பரிசோதனை செய்தபின் பயணம் செய்ய வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
News & Photo Credits: Vikatan
மற்ற செய்திகள்