சீட்டுக்கு அடியில என்ன அது? ஆந்திராவில் இருந்து வந்து கொண்டிருந்த கார்.. விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி உண்மை
முகப்பு > செய்திகள் > தமிழகம்காஞ்சிபுரம்: கார் சீட்டின் அடியில் வைத்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை போதை பொருள் தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போது நூதன வழிகளில் அரசு தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துவது அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து தங்கம் முதல் ரேசன் அரிசி வரைக்கும் இது தொடர்கிறது. கடத்தல் சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் இதற்காக போடும் திட்டங்கள் ஹாலிவுட் படங்களையே மிஞ்சும் வண்ணம் உள்ளது.
போலீசாருக்கு கிடைத்த தகவல்:
காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பி வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக மாநில போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் கட்டுப்பாடுடன் போலீசார் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டாட்டா இண்டிகா கார் ஒன்றை சோதனை செய்த போது காரின் பின்பக்க சீட்டின் கீழ் மறைத்து வைத்திருந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் தெரிய வந்த உண்மை:
இந்த காரை ஒட்டி வந்த இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தேனி மாவட்டத்தை சேர்ந்த மகேஷ்வரன் என்ற பரோட்டா மகேஷ் மற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பது தெரியவந்ததுள்ளது. மேலும், இவர்கள் இருவரும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கார் மூலமாக காஞ்சிபுரத்திற்கு எடுத்து வந்து விற்பனையில் ஈடுபட திட்டமிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தேடப்படும் குற்றவாளி:
அதுமட்டுமில்லாமல் கைது செய்யப்பட்ட மகேஷ்வரன் மீது தேனி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் நிலுவையில் உள்ள போதை பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கஞ்சா விற்பனை செய்யும் முக்கிய நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழக போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரின் அறிவிப்பு:
இதுபோன்று சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் 10581 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புகைப்படம் மூலமாக தகவல் அளிக்கவேண்டும் என்றால் spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம் என தமிழக போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்