'சார், அந்த பார்சலை கொஞ்சம் பிரிச்சு பாருங்க'... 'மதிப்பு மட்டும் ஒரு கோடி'... வெளிச்சத்திற்கு வந்த பிரபல 'யூ டியூபரின்' அதிர்ச்சி பக்கங்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சுங்கத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தீவிர ரோந்து பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தார்கள்.
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு ஃபைபர் படகு மூலம் சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகச் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து உஷாரான அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு, சுங்கத் துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் நாகை துறைமுகம், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
ரோந்தை முடித்துக் கொண்டு அதிகாரிகளின் படகு மீண்டும் நாகை துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது துறைமுகம் அருகே ஒரு படகில் சிலர் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருந்தனர். இதைப் பார்த்த அதிகாரிகள் அங்குச் சென்று விசாரிக்கலாம் எனப் படகை அவர்கள் பக்கம் திருப்பியுள்ளார்கள். அதிகாரிகள் வருவதைப் பார்த்த அந்த கும்பல் திடீரென நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளது.
உடனே சுதாரித்துக் கொண்ட சுங்கத் துறை அதிகாரிகள், ஃபைபர் படகிலிருந்த மூட்டைகளைச் சோதனை செய்யப் பிரித்துள்ளார்கள். அப்போது மூட்டைக்குள் கஞ்சா இருப்பதைப் பார்த்த சுங்கத் துறை அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். இதையடுத்து அந்த படகில் 10 மூட்டைகளிலிருந்த 280 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு மட்டும் ஒரு கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு பிரபல யூ டியூபர் 'நாகை மீனவன்' என்பவருக்குச் சொந்தமானது என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. குணசீலன் என்பவர் நாகை மீனவன் என்ற பெயரில் Youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவர் மீனைப் பற்றியும் மீனவர்கள் கடலுக்குள் செல்லும்போது அவர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது என்பது பற்றியும் கடலுக்குச் செல்லும் நேரங்களில் பேசி யூ டியூபில் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். தற்போது நாகை மீனவனின் படகில் வைத்து ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்